இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே அதிரி புதிரியான வெற்றியை ருசித்த அட்லி, அடுத்ததாக தளபதி விஜய் உடன் இணைந்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை இயக்கினார். தெறி மெர்சல் பிகில் என விஜய் அட்லி கூட்டணியில் உருவான இந்தப் படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
இப்படி வெறும் நான்கு திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே உற்று நோக்கும் இயக்குனர்களில் ஒருவரானார் அட்லி. இதன் பிறகு, பாலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பிய அட்லி, ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.
விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, தீபிகா படுகோனுக்கும் மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் சினிமாவுக்கு இது பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் இந்தியில் சற்றே வித்தியாசமான கமர்சியல் திரைப்படமாக இருந்ததால் அதனை பலரும் விரும்பினர். சொல்லப்போனால் அங்கு அந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் இருந்து ஒரு இயக்குனர், இந்தி திரை உலகத்திற்கு சென்று அங்கு ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க காரணமாக இருந்ததை பலரும் பாராட்டினர். இதன்பிறகு அவர் அல்லு அர்ஜுன் உடன் இணைவதாக தகவல் வெளியானது. அதேசமயம், சல்மான் கானுக்கும் அட்லி ஒரு கதை கூறியதாக கூறப்பட்டது. இதில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் பேச்சு எழுந்தது.
இப்படி தகவல்கள் மாறி மாறி வர கடைசியாக அட்லி, அல்லு அர்ஜுன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. மிக பிரம்மாண்டமான முறையில் அதிக அளவிலான பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இப்படியான சூழலில் படத்தில் தீபிகா படுகோன் இணைந்து இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வீடியோ காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. படம் சயின்டிபிக் மற்றும் வரலாறு சம்பந்தப்பட்ட கதையாக எடுக்கப்பட இருப்பது அந்த வீடியோவிலேயே ஊர்ஜிதம் ஆகி இருக்கிறது. இப்படியான சூழலில் தீபிகா படுகோன் தவிர படத்தில் நான்கு ஹீரோயின்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ஜான்வி கபூர், மிருணாள் தாகூர் ஆகியோரும் இணைந்து இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. விரைவில் இது குறித்த அப்டேட் வெளியாகும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.





