ராயன் திரைப்படத்தை முடித்த கையோடு தனுஷ் அடுத்ததாக குபேரன் படத்தில் நடிக்க சென்றார். தெலுங்கில் அவருக்கு நேரடி இரண்டாவது படமாக இது அமைந்துள்ளது. சேகர் கமுலா இயக்கும் இத்திரைப்படத்தில் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கு மிக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் பிச்சைக்காரன் கெட்டப்பில் தனுஷ் இருப்பதும் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
மும்பை இதற்கான படப்பிடிப்பை எடுத்து முடித்திருக்கிறார்கள். வரும் 10ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகிறது. இதற்கு தனுஷ், இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிப்பதாக இருந்தது. இதனை சாணி காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படத்திற்கான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆனால் திடீர் திருப்பமாக தனது அடுத்தப்படத்தை இயக்குவதற்கு சென்றார் தனுஷ். இதற்கு இட்லி கடை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தனுஷின் இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக இது உருவாகிறது. டாவ்ன் எனும் நிறுவனம் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து இட்லி கடையை தயாரிக்கிறது.
தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு இந்த படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இதில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். இதில் கதாநாயகனாகவும் தனுஷ்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அப்படி இல்லையாம். அவர் கேமியோ ரோலில்லேயே வருகிறாராம். அருண்விஜய்தான் படத்தின் ஹீரோவாம்.
இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் இட்லி கடை குறித்து பேசிய அவர், அது நன்றாக வந்திருப்பதாகவும், ஏற்கெனவே 40 நிமிடங்கள் பார்த்து விட்டதாகவும் கூறியிருந்தார். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் திரைப்படமாக இது இருக்கும் என்றும் ஜிவி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் நாளை வெளியிடுகிறது. இதற்கான போஸ்டர் சங்கராபுரம் என பெயர் பலகையுடன் பேருந்து நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. அநேகமாக படத்தின் ரிலீஸ்தான் தெரிவிக்கப்படும் என சினிமா விமர்சர்கள் கூறி வருகிறார்கள். இத்திரைப்படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் தனுஷ் கவனம் செலுத்த இருக்கிறார்.





