நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடகராக, எழுத்தாளராக தன் திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான அவரது 50வது படம் ராயன், 140 கோடி ரூபாய் வசூலை நெருங்கியிருக்கிறது.
அடுத்து தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகும் குபேரா படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ், பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருப்பதே படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க வைத்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் அடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியாக இருக்கிறது. இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் 2 பாகங்களாக உருவாகிறது. அதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்கிறார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ரஞ்சனி ஸ்ரீ, ராஷி கண்ணா, முனீஸ்காந்த், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் நித்யாமேனன், தனுஷின் நெருங்கிய தோழியாக நடித்திருப்பார். அவர் காதலை தனுஷ் புரிந்துக்கொள்ளாமல் கடைசி வரை மற்ற பெண்களை காதலிப்பார். இறுதியில் அவரது காதல் அவருக்கு தெரிய வரும். இடையில் அவரை தாய்க்கிழவி தாய்க்கிழவி என்ற பாடல் பாடி கலாய்ப்பார். இந்த பாடல் கூட இந்த படம் வந்த போது பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.
இப்போது பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தனுஷ் மற்றும் நித்யாமேனன் இருவருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவவிட்டுள்ள நடிகர் தனுஷ், ஒரு படத்தில் நடித்ததற்காக ஹீரோ, ஹீரோயின் இருவரும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை விருது பெறுவது என்பது பெரிய விஷயம். திருவும், ஷோபனாவும் ரொம்ப ஸ்பெஷல், திருவை அழகாக காட்டியதற்கு மிகவும் நன்றி ஷோபனா என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





