தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தற்போது ட்ரோல் மெட்டீரியல் ஆகி இருக்கிறது இந்தியன் 2 திரைப்படம். இந்த ஆண்டு ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் இந்தியன் 2வும் ஒன்று. அதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். முதலில் ரசிகர்கள் எதிர்பார்த்தது 1996 இல் பார்த்த சேனாதிபதி கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதுதான்.
அந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில், சேனாதிபதி கதாபாத்திரம் அவ்வளவு அழுத்தமாக எழுதப்பட்டிருக்கும். அது மட்டுமல்லாமல் அந்த கதாபாத்திரத்திற்காக கமல்ஹாசன் கொடுத்த பங்களிப்பு பலரையும் புருவத்தை உயர்த்த செய்திருக்கும். ஒவ்வொரு காட்சிக்காகவும் மெனக்கெட்டு அவர் பல்வேறு செயல்களை அதில் செய்திருப்பார்.
இரண்டாவதாக எதிர்பார்த்தது அந்த திரைப்படத்தின் கதையைதான். முதல் பாகத்தில் வெறும் லஞ்சத்திற்கு எதிரான கதை தான் இந்த திரைப்படம் என்று கூறி விட முடியாது. அதற்குள் காதல், குடும்ப பாசம், சுதந்திர வேட்கை என ஏராளமான விஷயங்களை சங்கர் புகுத்தி இருப்பார். குறிப்பாக ஏ ஆர் ரகுமான் இசை அந்த திரைப்படத்தில் கொண்டாடப்பட்டது.
இப்படி இந்தியன் படத்தின் முதல் பாகம், ரசிகர்களின் மனதில் இன்றும் மிகப்பெரிய அளவில் இடம் பிடித்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்போடு திரையரங்குகளில் போய் இந்தியன் 2 திரைப்படத்தில் அமர்ந்தவர்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது. ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு உப்புச்சப்பில்லாத ஒரு திரைக்கதையை கொடுத்து ஏமாற்றினார் சங்கர்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ரசிகர்கள், இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இணையத்தில் வைத்து வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். போதாக்குறைக்கு அந்த திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக, அதில் இருக்கும் சில காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு கிண்டல் அடிக்க வருகின்றனர். தற்போது இணையத்தைத் திறந்தாலே, இந்தியன் படத்தின் கிண்டல் காட்சிகள் மட்டும்தான் வருகின்றன.
இப்படியான சூழலில் அதிலிருந்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது படத்தில் சித்தார்த் கேரக்டரில் நடிப்பதற்கு முதலில் சிவகார்த்திகேயனைதான் அணுகி இருக்கிறார் இயக்குனர் சங்கர். ஆனால் கால் சீட் பிரச்சினை காரணமாக, படத்தில் நடிப்பதில்லை என்று கூறிவிட்டாராம் சிவகார்த்திகேயன். இதை அறிந்த ரசிகர்கள் நல்ல வேலை நம்ம வீட்டு பிள்ளை பிழைத்தார் என்றும், இல்லையென்றால் கமலுடன் சேர்த்து அவரையும் வறுத்தெடுத்து இருப்பார்கள் என்றும் கூறி வருகின்றனர்.





