நடிகை நயன்தாரா கோலமாவு கோகிலா திரைப்படத்திலிருந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது பெரிய நட்சத்திரங்களுடனும் அவர் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இருப்பினும், சமீப காலங்களாக நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரும் திரைப்படங்களே அதிகமாக உள்ளன.
ஆனால் இதில் பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வி அடைந்து விடுவது என்பது தான் இங்கு சோகமான உண்மை. கடந்த ஆண்டும் அவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் பிராமண சமூகத்தை இழிவு படுத்தி விட்டதாகவும் படத்தின் மீது பயங்கர எதிர்ப்பு குரல் எழுந்தது.
இது தொடர்பாக மகாராஷ்டிராவில் ஒரு பிரிவினர் அவர் மீது வழக்கு தொடர, மன்னிப்பு கடிதம் நீட்டினார் நயன்தாரா. இப்படியாக இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு அவர், ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த ஜவான் திரைப்படம் இந்தி திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஆனால் நயன்தாராவுக்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்று கூற முடியாது. அவரது கதாபாத்திரம் படத்தில் வலுவாக இல்லை என்று பலரும் கூறினார்கள். இந்த நிலையில் தற்போது நயன்தாரா மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மாதவன் சித்தார்த் இணைந்திருக்கும் டெஸ்ட் திரைப்படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். இதேபோல் மண்ணாங்கட்டி என்னும் திரைப்படத்திலும் நயன்தாரா உள்ளார்.
1960களில் மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. யோகி பாபுவும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபோக நடிகர் கவினுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. இப்படி அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்க தற்போது அவர், மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதன் முதல் பாகத்தை காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கினர். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இதனிடையே அண்மையில், ஆர் ஜே பாலாஜி மாசாணி அம்மன் என்னும் படத்தை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சமயத்தில்தான் திடீரென மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டாலும், இயக்குனர் பற்றி குறிப்பிடவே இல்லை. இதனால் இரு தரப்பிற்கும் இடையே லேசான உரசல் இருப்பது உறுதியானது. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் ஹரி, சுந்தர் சி மற்றும் விக்ரம் குமார் ஆகியோரை தயாரிப்பு நிறுவனம் அணுகியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மூவரில் ஒருவர் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.





