தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் ஏ வெங்கடேஷ். நடிகராகவும் உள்ளார். சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியதாவது, வழக்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படங்களில் அவரது அறிமுக காட்சி பாடலுடன் துவங்கும். அப்படி தான் ஏராளமான படங்களில் வந்துள்ளது. அதை மனதில் வைத்து அதே போல் நடிகர் சிம்பு படத்துக்கும் நான் அறிமுக பாடல் வைத்திருந்தேன்.
சிம்பு ஹீரோவாக நடித்த 2வது படம் தம். அந்த படத்தை நான்தான் இயக்கினேன். அதனால் சிம்பு அறிமுகமாகும் காட்சியில் கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன் என்று அவருக்கு அறிமுக பாடல் காட்சி வைத்து எடுத்திருந்தேன். அந்த படமும் அந்த பாடலும் செம ஹிட் ஆனது.
அந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். தேவா இசையமைத்து இருந்தார். தம் படத்தை நடிகர் விஜய் பார்த்திருக்கிறார். அதன்பிறகு நடிகர் விஜய் என்னை சந்தித்த போது, தம் படத்தில் சிம்பு அறிமுக பாடல் காட்சி நன்றாக இருந்தது. ஆனால் நான் நடித்த பகவதி படத்தில் ஏன் எனக்கு அப்படி அறிமுக பாடல் காட்சி வைக்கவில்லை என்று கேட்டார்.
சிம்பு படத்தில் கல்லூரி எலக்ஷனில் அவர் ஜெயிப்பது போன்ற காட்சி இருந்ததால் அப்படி வைத்தேன். உங்களுக்கு அடுத்த படத்தில் வைத்து விடுகிறேன் என்று எப்படியோ சொல்லி சமாளித்தேன். ஆனால் அதற்கு பிறகு விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் நீ எந்த ஊரு நான் எந்த ஊரு என்ற பாடல் காட்சியுடன் விஜய் அறிமுகமானார். அதே போல் சிவகாசி படத்திலும் வாடா வாடா தோழா என பாடல் காட்சியில் தான் அறிமுகமானார். இந்த 2 படங்களுமே பெரிய வெற்றியை பெற்றது.
ஆனால் இது விஜய் விருப்பத்துக்காக வைக்கப்பட்டதா, அல்லது அந்த படங்களின் இயக்குனர் பேரரசுவே திட்டமிட்டு வைத்தாரா என்பது தெரியாது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நடிகர் விஜய் இவ்வளவு பெரிய நடிகராக உச்சத்தை தொட்டதுக்கு காரணம் அவர் மற்ற நடிகர்களின் படங்களையும் கூர்ந்து கவனிக்கிறார். அவர்களது வெற்றி பார்மூலாக்களையும் தெரிந்து கொள்கிறார்.
அதே போல் நடிகர் சிம்பு ஆடும் பாடல் காட்சியில் சில நிமிடங்களுக்கு தொடர்ந்து டான்ஸ் மூவ்மென்ட் இருக்கும். அதே போல் நடிகர் விஜய் ஆடும் பாடல் காட்சியிலும் சில நிமிடங்களுக்கு தொடர்ந்து டான்ஸ் மூவ்மென்ட் இருக்கும். இது அவர்கள் 2 பேருடைய பாடல் காட்சிகளில்தான் பார்க்க முடியும். மற்ற ஹீரோக்கள் அப்படி ஆடுவதில்லை. ஏனென்றால் சிம்பு விஜய் இருவருமே சிறந்த டான்ஸர்கள் என்று இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.





