இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் அமீர் ஆகியோர் இணைந்து மாயவலை என்னும் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இதில் ஆர்யாவின் தம்பி சத்யா, தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரமேஷ் பாலகிருஷ்ணன் இதனை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அமீர் முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் இந்த திரைப்படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வெற்றிமாறன் பேசியதாவது,
வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் இரண்டு மூன்று பேர் நடிப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது தடைப்பட்டு போக, யாரை நடிக்க வைக்கலாம் என்று எனது நண்பர் ஜெகதீஷிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்தான் அமீரை நடிக்க வைக்கலாமே என்று ஆரம்பித்தார். ஆனால் அவர் மதுரைக்காரரே என்று கூறி விட்டேன். பிறகு ஒருநாள் அவரை நடிக்க வைக்கலாம் என எனக்குத் தோன்றியது.
இதையடுத்து நானும் ஜெகதீஷும் அமீரை போய் சந்தித்தோம். அப்போது எங்கள் இருவருக்குள் மிகப்பெரிய பழக்கம் என்று எதுவும் இல்லை. நான் வடசென்னை படத்தின் கதாபாத்திரத்தை அவருக்கு விவரித்தேன். முழுவதையும் கேட்டு பொறுமையாக இருந்த அமீர், நான் இந்தப் படத்தை இயக்க நேர்ந்தால் என்னை ராஜன் கதாபாத்திரத்தில் வைத்திருக்க மாட்டேன். இருந்தாலும் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதால் செய்கிறேன் என்று தெரிவித்தார்.
இதைக் கேள்விப்பட்டதும், அமீர் நண்பர்களும் சரி என் நண்பர்களும் சரி, மூன்று நாட்கள் கூட இவர்கள் சேர்ந்து படம் பண்ண மாட்டார்கள் என்று கூறினர். ஆனால் அன்று முதல் இன்று வரை எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வந்ததே இல்லை. என்னை எப்போதும் சமமாக பார்ப்பார் அமீர். சினிமாவைத் தாண்டி நாங்கள் இருவரும் பல விஷயங்களை விவாதிப்போம்.
தற்போது எனது வாடிவாசல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அமீர் நடிக்கிறார். வடசென்னை திரைப்படத்தில் ராஜனாக அவர் நடிக்கும் போது, நான் அவருக்கு சில விஷயங்களை கூற வேண்டும் என்று இருந்தது. ஆனால் இதில் அப்படி அல்ல, வாடிவாசலுக்காக நான் இவரை எதற்கு யோசிக்கிறேன் என்றால், இவரிடமிருந்து சில விஷயங்களை நான் வாங்க வேண்டி உள்ளது. இவர் வாடிவாசலில் உள்ளே இருந்தால், எனக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும் என்று பேசி முடித்தார்.
தொடர்ந்து பேசிய அமீர், சூர்யாவிடம் இருந்து நான் ஒதுங்கி விட்டேன். நான் கொஞ்சம் சுயமரியாதை பார்ப்பவன். வருங்காலத்தில் சூர்யா, கார்த்திவுடன் மீண்டும் இணைவேனா என்று கேட்டால், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இணைவேன். ஒருமுறை வெற்றிமாறன் என்னிடம் சூர்யாவுடன் நடிக்கிறீர்களா என்று கேட்டார். உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே வெற்றி என்று கூறி விட்டேன் என அமீர் தெரிவித்தார்.





