இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் அவரது 44வது படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு, அந்தமானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள், நடிகைகள் பங்கேற்று நடித்து வருகின்றனர்.
சமீப காலமாக, நடிகர் சூர்யா நடித்த பல படங்கள் பிளாப் படங்களாக மாறிவிட்டன. அவரது நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், சூரரைப் போற்று ஆகிய படங்களை தவிர மற்ற எந்த படமும் சூர்யாவுக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தை தான் சூர்யா பெரிதாக நம்பி இருக்கிறார். அந்த படம் அவருக்கு திருப்புமுனை வெற்றியை தரலாம்.
சூர்யா நடிப்பில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட என்ஜிகே, எதற்கும் துணிந்தவன், தானா சேர்ந்த கூட்டம், காப்பான் என பல படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. அதே நேரத்தில் டைரக்டர் பாலா இயக்கத்தில் நடிக்க வேண்டிய வணங்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பை சூர்யாவே மறுத்துவிட்டார். வாடிவாசல் படத்திலும் அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை.
இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க வேண்டிய புறநானூறு படத்தையும் அவரை திருத்தம் சொல்லி, கதையை மாற்றச் சொல்லி இயக்குனரை வெறுப்பேற்றி அந்த படத்தையே டிராப் செய்ய வைத்துவிட்டார் சூர்யா. ஆனால் சிவகார்த்திகேயன், தனுஷ் இருவரில் ஒருவரை அந்த படத்தில் நாயகனாக்கி விடும் திட்டத்தில் சுதா கொங்கரா இருந்து வருகிறார்.
மும்பையில், மனைவி ஜோதிகா மற்றும் மகன், மகளுடன் செட்டிலாகிவிட்ட சூர்யா, கர்ணா என்ற இந்தி படத்தில் நடிக்க கமிட் ஆனார். ஆனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் சூர்யா போன்ற தென்னிந்திய நடிகரை நம்பி படம் எடுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், அந்த படத்தை டிராப் செய்துவிட்டது. அந்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பை சூர்யா இழந்துள்ளார்.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனது 44வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தில் நான்கைந்து வில்லன்கள் நடித்துள்ளனர். அதில் ஒரு வில்லனாக நடிகர் உறியடி விஜயகுமார் நடித்துள்ளார். 8 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது, டைரக்டர் கார்த்திக் சுப்பராஜூக்கும், உறியடி விஜயகுமாருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில், இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று உறியடி விஜயகுமார் அந்த படத்தை விட்டு விலகியுள்ளார். இனி சூர்யாவும், அவரும் நடித்த காட்சிகளை என்ன செய்வது என படக்குழுவினர் புலம்பி வருகின்றனர்.





