நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்வது உறுதியாகி விட்டது. அதேபோல் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படமும் பொங்கலுக்கு வருகிறது என்பதால் இந்த இரண்டு படங்களும் நேருக்கு நேராக பண்டிகை களத்தில் மோதுகின்றன. லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை.
இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராணுவ பின்னணியில் இந்த படம் இப்போது உருவாகி வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஆரம்பகட்ட பணிகளில் இயக்குநர் முருகதாஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்தியேகனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையர் தேர்வு நடந்து வந்த நிலையில், நாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பது உறுதியாகி விட்டது. மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க அவர் தீவிர கவனம் செலுத்திய நிலையில், இந்த படத்தில் பூஜா ஹெக்டே தான் நடிக்கிறார்.
இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தை, நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 50 கோடிக்கு பெற்றுள்ளது. இதனால், ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தின் தயாரிப்பாளரும் அதுபோன்ற ஒரு பெரிய தொகையை, டிஜிட்டல் உரிமத்துக்காக எதிர்பார்த்த நிலையில், மிக குறைவாக கேட்கப்பட்டுள்ளது.
கமல் தயாரிக்கும் அந்த படத்திலும், ஹீரோ சிவகார்த்திகேயன்தான், ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் அவரேதான் என்னும் போது டிஜிட்டல் உரிமம் ஒரே மாதிரி இல்லாதது குறித்து தயாரிப்பாளர் ஏமாற்றத்தில் இருந்துள்ளார். அப்படி என்றால், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தை விட, என் படம் மட்டமாகி போய்விட்டதா என ஏகப்பட்ட டென்சனில் இருக்கிறார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் என்ற தகவல் வைரலாகி வருகிறது.





