தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரவி. அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு ஜெயம் ரவி என்று அவர் அழைக்கப்பட்டார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக மாறினார்.
கடந்த 2009ம் ஆண்டில் தனது கல்லூரி தோழி ஆர்த்தியை காதல் திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் தனது பெயரை ரவிமோகன் என்றும் அவர் மாற்றிக்கொண்டார்.
இந்த சூழலில் அவர்கள் இருவரும் விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நாட்களில் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் 40 லட்சம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று ஆர்த்தி குடும்ப நீதிமன்றத்தில் கோரிக்கை மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 3 லட்சம் ரூபாய் மட்டும் ஆர்த்திக்கும் பிள்ளைகளுக்கும் இடைக்கால ஜீவனாம்சமாக நடிகர் ரவி மோகன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளை சந்திக்க விடாமல் ஆர்த்தி மறுக்கிறார்.
அவர்கள் விபத்தில் சிக்கிய தகவல் கூட தனக்கு தாமதமாக தான் தெரிய வந்தது என்றும் அவர் தனது குழந்தைகளை பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் ரவிமோகன் வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ரவிமோகன் தனது பிள்ளைகளை காண அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
குடும்ப விவகாரத்தில் மிகவும் மனம் உடைந்து காணப்பட்ட நடிகர் ரவிமோகனுக்கு கோர்ட் சாதகமாக தீர்ப்பை தந்துள்ளதால், மீண்டும் பழையபடி சினிமாவில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் நடிகர் ரவிமோகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நடிப்பில் கராத்தே பாபு என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்போது ரவிமோகன் தயாரிப்பாளராக இருப்பது மட்டுமின்றி நடிகர் யோகிபாபு நடிக்கும் ஒரு படத்தையும் டைரக்ட் செய்து வருகிறார்.





