- Advertisement -
Homeபொழுதுபோக்குவணங்கான் படத்தில் இடம்பெற்ற அந்த காட்சியில் லாஜிக் இல்லையா? விளக்கம் தந்த இயக்குனர் பாலா!

வணங்கான் படத்தில் இடம்பெற்ற அந்த காட்சியில் லாஜிக் இல்லையா? விளக்கம் தந்த இயக்குனர் பாலா!

- Advertisement -

கடந்த 2016ம் ஆண்டில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான படம் தாரை தப்பட்டை. சசிக்குமார் வரலட்சுமி சரத்குமார் ஆர்கே சுரேஷ் ஜிஎம் குமார் அமுதன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் இளையராஜாவின் இசையில் வெளியான 1000வது படமாகும். இந்த படத்துக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு கடந்த 10ம் தேதி வெளியான படம் பாலாவின் வணங்கான்.

இந்த படத்தில் அருண்விஜய் நாயகனாக நடித்துள்ளார். வணங்கான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கதைப்படி வாய் பேசாத காது கேட்காத மாற்றுத் திறனாளியான அவர், ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் காவலாளியாக பணிசெய்து வருவார். ஒரு கட்டத்தில் காட்டுக்குள் 2 பேரை அருண் விஜய், கொடூரமாக அடித்து கொலை செய்வார்.

ஆனால் இப்படி 2 பேரை அவர் கொலை செய்ததற்கான காரணத்தை அவர் யாரிடமும் சொல்ல மாட்டார். கோர்ட்டில் நீதிபதி கேரக்டரில் நடித்த மிஷ்கின், பலமுறை இந்த கொலைகளை செய்ய என்ன காரணம் என்று கேட்டு அவரிடம் விசாரணை நடத்துவார். ஆனால் அருண் விஜய் எந்த தகவலையும் சொல்ல மாட்டார். அடுத்து நீதிபதி உத்தரவுபடி அருண் விஜய் சிறையில் வைக்கப்படுவார்.

இப்படிப்பட்ட ஒரு காட்சியில், ஜெயில் அறைக்குள் படுத்திருக்கும் அருண் விஜயை அவரது தங்கை, காதலி மற்றும் சர்ச் பாதர் ஆகியோர் பார்க்க வருவர். அருண் விஜய் உள்ள ஜெயில் அறைக்குள் வந்து அவரது பக்கத்தில் பாயில் அமர்ந்து அவர்கள் பேசுவது போல காட்சி இருக்கும். இதை படத்தில் பார்த்த ரசிகர்கள், இது எப்படி சாத்தியம், கைதி இருக்கும் ஒரு சிறை அறைக்குள் வெளியாட்கள் வர போலீஸ் எப்படி அனுமதிக்கும், இது லாஜிக்கா இல்லையே என்று விமர்சித்தனர்.

இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பாலா கூறியதாவது, கோர்ட்டில் அருண் விஜயை விசாரிக்கும் நீதிபதி மிஷ்கின், நோ போலீஸ் கஸ்டடி நோ ரிமாண்ட் எனக்கூறி அவரை மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்க உத்தரவிடுவார். அதை ரசிகர்கள் பலரும் சரியாக கவனிக்க தவறி விட்டதால் இந்த காட்சி அவர்களுக்கு லாஜிக் இல்லாமல் தவறாக தெரிகிறது.

அது குற்றவாளிகள் வைக்கப்படும் வழக்கமான ஜெயில் அல்ல, மருத்துவமனையில், நோயாளிகள் போலீஸ் காவலில் வைக்கப்படும் சிறைக்கூடம். அங்கு நோயாளிகளாக தான் அவர்கள் கருதப்படுகின்றனர். குற்றவாளிகளாக அவர்கள் இருப்பதில்லை. அதனால்தான், அருண் விஜய் இருக்கும் சிறை அறைக்குள் வந்து அந்த கேரக்டர்கள் சந்திப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது, என்று இயக்குனர் பாலா விளக்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்