தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் வடிவேலு. தனது உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் எந்த காமெடி காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடும் வல்லமை பெற்றவர் வைகைப்புயல் வடிவேலு. அப்படி அவர் நடித்த பல கேரக்டர்கள் அவரை பெரிய அளவில் ரசிக்க வைத்தன.
குறிப்பாக அலர்ட் ஆறுமுகம் என்கவுண்டர் ஏகாம்பம் சூனாபானா கைப்புள்ள காண்ட்ராக்டர் நேசமணி நாய் சேகர் 23ம் புலிகேசி வீரபாகு வண்டுமுருகன் பாடிசோடா டாக்டர் புத்ரி தேங்காய் கடை தேனப்பன் என வடிவேலு ஏற்று நடித்த இந்த கேரக்டர்கள் எல்லாமே பெரிய அளவில் காமெடியில் ரசிக்கப்பட்டவை.
இதில் இயக்குனர் பாரதி கண்ணன் இயக்கத்தில் 1998ம் ஆண்டில் வெளியான படம் கண்ணாத்தாள். இந்த படத்தில் சூனாபானா என்ற கேரக்டரில் ஊருக்குள் ஆடு திருடிக்கொண்டும் குடித்துக்கொண்டும் ஊதாரியாக ஏமாற்றுப் பேர்வழி கேரக்டரில் நடிகர் வடிவேலு நடித்திருப்பார்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் மதுவில் விஷம் கலந்து குடிக்க போகும் காதலனிடம் அந்த மதுவை வலுக்கட்டாயமாக பிடுங்கி குடித்துவிடும் சூனாபானா வடிவேலு பிறகு விஷம் குடித்ததால் உயிருக்கு போராடும் ஒரு காட்சியை காமெடியாக எடுத்திருப்பார் இயக்குனர் பாரதிகண்ணன். இந்த காட்சியில் வடிவேலுவுடன் காதலன் கேரக்டரிலும் அவர் நடித்திருப்பார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிகண்ணன் கூறியதாவது, சூனாபானா மதுபானத்தை பிடுங்கி குடிக்கும் காட்சியில் முதலில் வேறு ஒரு நடிகரை தான் நான் நடிக்க ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் அந்த காட்சியில் அவர் சரியாக நடிக்கவில்லை. பலமுறை சொல்லிக் கொடுத்தும் அவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த வடிவேலு, நீங்கள் சொல்லித் தருவதே மிக நன்றாக ரசிக்கும்படி உள்ளது. நீங்களே இந்த காட்சியில் என்னுடன் நடித்து விடுங்கள் என்று கூறினார். மேலும் நான் ஹெவியா பெர்பாஃமென்ஸ் பண்ணிக்கிறேன். நீங்க அப்படியே லைட்டா நடிங்க என்றும் சொல்லிக் கொடுத்தார்.
அதனால் அந்த காட்சியில் அவர் விஷத்தை குடித்துவிட்டு பயங்கரமாக தவிப்பார். புலம்புவார். ஆனால் நான், என் விஷத்தையே வாங்கி குடிச்சிட்டு என்னையே திட்டறது அவ்வளவு நல்லா இல்லண்ணே என்பேன், அடப்பாவி பாற்கடலை கடைஞ்சு அமுதத்தையாடா கொடுத்தே? விஷத்தை கொடுத்திட்டியேடா, அதை தட்டியாவது விட்டுருக்கலாமேடா என்பார். அந்த காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது என்று இயக்குனர் பாரதிகண்ணன் கூறியிருக்கிறார்.





