தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர்தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா. கடந்த 1980களில் அவர் இயக்கிய படங்கள் தான் பல அறிமுக ஹீரோக்கள் தமிழ் சினிமாவுக்குள் வர வாய்ப்பாக இருந்தது. 16 வயதினிலே படம் தான் பாரதிராஜா இயக்கிய முதல் படம். நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் நடிகை ஸ்ரீதேவி மற்றும் கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் சிவப்பு ரோஜாக்கள் டிக் டிக் அலைகள் ஓய்வதில்லை மண்வாசனை முதல் மரியாதை கிழக்கு சீமையிலே வேதம் புதிது புது நெல்லு புது நாத்து என அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
அதே போல் நடிகைகள் ராதா ராதிகா ரேவதி ரேகா பிரியாமணி காஜல் அகர்வால் நடிகர்கள் பாண்டியன் கார்த்திக் நெப்போலியன் என பலரையும் சினிமாவில் அறிமுகம் செய்த வைத்ததும் பாரதிராஜா தான். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகர்களாக இதில் சிலர் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் திரைப்பட இயக்குனராக இருந்து நடிகராக மாறிய பாரதிராஜா பாண்டிய நாடு குரங்கு பொம்மை திருச்சிற்றம்பலம் நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இயக்குனராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் தனது தனி முத்திரையை திரையில் பதித்தார்.
இந்நிலையில் பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் குமார் திடீரென மறைந்த நிலையில் அவரது மனநிலை உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. தீவிர மன உளைச்சலில் தவித்த அவருக்கு அடிக்கடி உடல் நலமும் பாதிக்கப்பட்டது. சமீபத்தில் 3 மாதங்களுக்கு மேலாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, உயிர் பிழைத்து வந்தார்.
ஆனால் தற்போது பாரதிராஜா மீண்டும் உடல் நலம் பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்களுக்கு பலத்த வருத்தத்தை தந்திருக்கிறது. முதுமையின் பாதிப்புகளில் இருந்து பாரதிராஜா மீண்டும் வருவாரா? மீண்டும் அவரது முகத்தை திரையில் காண முடியுமா? அந்த கம்பீரமான கணீர் குரலை கேட்க முடியுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவரது உடல் நலம் பூரண குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.





