தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என கொண்டாடப்படும் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் புதிய வார்ப்புகள் கல்லுக்குள் ஈரம் முதல் மரியாதை கிழக்குச் சீமையிலே என பல அற்புத படைப்புகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்தவர். சமீபகாலமாக குணச்சித்திர நடிப்பிலும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர்.
இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் குமார். பாரதிராஜா இயக்கிய தா்ஜமகால் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். கடைசியாக மார்கழி திங்கள் என்ற படத்தையும் டைரக்ட் செய்தார். ஆனால் நடிகராக இயக்குனராக மனோஜ்குமார் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் 48 வயதில் மனோஜ்குமார் மறைந்து விட்டார்.
தனது ஒரே மகனின் இழப்பை தாங்க முடியாமல் இயக்குனர் பாரதிராஜா நொறுங்கிப் போனார். ஏற்கனவே வயது மூப்பின் காரணமாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த பாரதிராஜாவுக்கு தனது மகனின் இறப்பும் பெரிய துன்பத்தை கொடுத்து மேலும் அவரை முடக்கியது. மனோஜ்குமார் மறைவுக்கு பிறகு மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் கூறுகையில், மகனின் பிரிவால் அண்ணன் பாரதிராஜா இன்னும் படுமோசமான நிலையில் உள்ளார். அவருக்கு நினைவாற்றல் தப்பிவிட்டது. யாருடனும் பேசுவதில்லை. கவனமே இல்லாமல் இருந்து வருகிறார் என்று கூறியிருந்தார். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா. இவரது தங்கை நடிகை நிரோஷா. இவர்களது தந்தை நடிகவேள் எம்ஆர் ராதா. இலங்கையை சேர்ந்த கீதா என்பவரை எம்ஆர் ராதா காதல் திருமணம் செய்த நிலையில் அந்த தம்பதிக்கு பிறந்தவர்கள்தான் ராதிகா மற்றும் நிரோஷா சகோதரிகள். இந்நிலையில் கடந்த வாரத்தில் ராதிகா, நிரோஷாவின் தாயார் கீதா உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் வீட்டுக்கு நேரில் சென்ற இயக்குனர் பாரதிராஜா, ராதிகாவை சந்தித்து அவரது அம்மாவின் மறைவுக்கு துக்கம் விசாரித்து ஆறுதலும் கூறியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராதிகா சரத்குமார் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்படி என்றால் இயக்குனர் பாரதிராஜா, அவரது தம்பி ஜெயராஜ் சொல்வது போல் நினைவாற்றல் குறையவில்லை. நல்ல மனநிலையில் ஆரோக்கியமான நினைவாற்றலுடன் இருப்பதை பாரதிராஜா இதன்மூலம் உறுதி செய்திருக்கிறார்.





