தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் கே பாக்யராஜ். ஆரம்ப காலத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில்தான் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் பாக்யராஜ் கதை வசனகா்த்தாவும் இருந்தார். அதன்பிறகு இயக்குனராக நடிகராக பெரிய அளவில் கே பாக்யராஜ் பிரபலமானார்.
குரு சிஷ்யன் உறவு முறையில் பாரதிராஜா, கே பாக்யராஜ் இடையில் நீண்டகாலமாக நட்பு இன்றும் நீடித்திருக்கிறது. இதற்கிடையே ஒரு தடவை பாரதிராஜா, பாக்யராஜை அடித்து விரட்டிய ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது. ஒருமுறை இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாட்டால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கே பாக்யராஜை கோபத்தில் அடித்து விரட்டியிருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.
இதுகுறித்து மறைந்த நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது கூறியதாவது, இயக்குனர் பாரதிராஜா, புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக படம் இயக்கும் முயற்சியில் அவர் இருந்தார். அப்போது நடிகர் கமல்ஹாசன் என்னை பாரதிராஜாவிடம் அனுப்பி வைத்தார். நான் பாரதிராஜாவை நேரில் சென்று சந்தித்தேன். அப்போது ஒரு அறையில் கதை விவாதம் நடந்துக்கொண்டு இருந்தது.
நீங்கதான் பாரதிராஜாவா? நடிகர் கமல்ஹாசன் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார் என்று அவரிடம் சொன்னேன். சிறிது நேரம் அங்கு நடந்த கதை விவாதத்தை கவனித்தேன். பிறகு பாரதிராஜாவை தனியாக அழைத்து, இந்த கதையா படமாக எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டேன். பாரதிராஜா ஆமாம் என்றார். இந்த படம் ஓடாது என்று பாரதிராஜாவிடம் நேரடியாகவே கூறிவிட்டேன்.
அதிர்ச்சியடைந்த பாரதிராஜா, உள்ளே இருப்பவர்கள் யார் தெரியுமா என்று என்னிடம் கோபமாக கேட்டார். அதெல்லாம் எனக்கு தேவையில்லை. நான் அனைத்து மொழி படங்களையும் பார்க்கிறவன். ஹாலிவுட் படங்கள் வரை பார்த்தவன். என்னோட சினிமா அறிவை பயன்படுத்தி சொல்கிறேன். இந்த படம் சத்தியமாக ஓடாது. உங்களிடம் பாக்யராஜ் என்று ஒருவர் இருந்தாரே, எங்கே அவர் என்று கேட்டேன். உடனே பாரதிராஜா, அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஆகிவிட்டது. அடித்து விரட்டி விட்டேன் என்று கூறினார்.
என்ன சார் புதுசா கம்பெனி ஆரம்பிக்கும்போது நல்ல திறமைசாலிகளை அருகில் வைத்துக் கொள்ள மாட்டீங்களா? என்று கேட்டேன். அப்பறம் பாக்யராஜை அழைத்து வர நானே சென்றேன். அப்போது பாக்யராஜ் ஒரு ஓட்டலில் தங்கி கதை எழுதிக் கொண்டு இருந்தார். அவரை நேரில் சந்தித்து, பாரதிராஜா சாருடன் வந்து பணியாற்றுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்று கூறி அழைத்து வந்தேன் முதலில் மறுத்த பாக்யராஜ் அதன் பின்னர் கொஞ்சம் பொறுமையாக கேட்ட பின்பு, புரிந்து கொண்டு பாரதிராஜாவுடன் வந்து இணைந்தார் என்று நடிகர் மனோபாலா அந்த நேர்காணலில் இந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்.





