இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சேரன். பார்த்திபன் மீனா நடித்த பாரதி கண்ணம்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அதன்பிறகு பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு தவமாய் தவமிருந்து பாண்டவர் பூமி ஆட்டோகிராப் என தொடர் வெற்றி படங்களை சேரன் தந்தார்.
இயக்குனர் சேரன் படங்களை டைரக்ட் செய்தது மட்டுமின்றி அவர் இயக்கிய தவமாய் தவமிருந்து பொக்கிஷம் ஆட்டோகிராப் போன்ற படங்களில் அவரே நாயகனாகவும் நடித்தார். நடிகராகவும் அவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிற இயக்குனர்களின் இயக்கத்தில் ராமன் தேடிய சீதை சொல்ல மறந்த கதை பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களிலும் நடித்தார்.
தமிழ் சினிமாவில் நல்ல படைப்பாளியாக அறிமுகமாகி நல்ல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சேரன் ஒரு கட்டத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காணாமல் அப்படியே தேங்கிப் போய்விட்டார். விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அவரது மகள் காதல் விவகாரமும் பெரிய அளவில் அவருக்கு மன வருத்தங்களை தந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் சேரன் கூறியதாவது, நான் நடித்த ஆட்டோகிராப் படம் வௌிவந்த பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. விஜயை நேரில் சந்தித்து கதை சொன்னேன். கதை அவருக்கும் பிடித்து விட்டது.
அதனால் என்னுடைய இயக்கத்தில் நடிக்க அவர் ஓகே சொல்லி கால்ஷீட் தேதியும் தந்துவிட்டார். ஆனால் அப்போது நான் தவமாய் தவமிருந்து படத்தை டைரக்ட் செய்துக்கொண்டு இருந்தேன். நான் ஒரு படத்தை இயக்கினால், அந்த படத்தை முடிக்காமல் வேறு படத்தை இயக்க மாட்டேன். ஒரே நேரத்தில் 2 படங்களுக்கு பணிசெய்ய என்னால் முடியாது. அப்படி ஒரு வியாதி எனக்கு இருக்கிறது.
அதனால் தவமாய் தவமிருந்து படம் டைரக்ஷனில் நான் முழு கவனம் செலுத்தியதால், விஜய் படத்தை என்னால் இயக்க முடியாமல் போய்விட்டது. நான் செய்த தவறுகளில் மிகப்பெரிய தவறு அதுதான். விஜய் படத்தை நான் இயக்கி இருந்தால் நான் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து இருப்பேன். என் சினிமா பயணம் வேற லெவலில் இருந்திருக்கும். அந்த தவறு இன்று வரை நான் அனுபவிக்கும் ஒரு நிலைக்கு தள்ளிவிட்டது, என்று இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.





