நேற்று முன்தினம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த கங்குவா படம் வெளியானது. ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்களே, கங்குவா படத்தை கழுவி கழுவி ஊற்றி விட்டனர்.
கங்குவா படம் நெருப்பு மாதிரி இருக்கும், இந்த படத்தை வாயை பிளந்துகிட்டு எல்லோரும் பார்ப்பாங்க என்று படத்தின் ஹீரோ சூர்யா பேசியிருந்தார். படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா 2000 கோடி ரூபாய் வசூலை கடந்துவிடும் என்றும் கூறியிருந்தார்.
இந்த அளவுக்கு பில்டப் செய்யப்பட்ட கங்குவா படத்தை பார்த்த ரசிகர்கள், படம் முழுக்க கேரக்டர்கள் யாரும் பேசவில்லை. ஓயாமல் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது கங்குவா இல்லை. கத்துவா என்று பெயர் வைத்திருக்கலாம். காதுகளே வலிக்கிறது. தலைவலி மாத்திரை போட்டால் கூட கங்குவா படம் ஏற்படுத்திய தலைவலி போகாது என்று கூறியிருந்தனர்.
மேலும், படம் பார்க்க வருபவர்கள் காதுகளை அடைத்துக்கொள்ள டிக்கெட்டுகடன் 10 கிராம் பஞ்சும், தலைவலி மாத்திரையும் கொடுங்கள் என்றும் ரசிகர்கள் பலர் எரிச்சலாக கூறியிருந்தனர். கதையே இல்லாமல், வெறும் மேக்கிங் படத்தை பார்த்து ரசிக்க நாங்கள் எல்லாம் முட்டாள்களா என்றும் சிலர் ஆத்திரமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
அமரன் படம் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் 490 தியேட்டர்களில் கங்குவா படத்தை வெளியிட்டு அமரன் படத்தை எடுக்க வைத்து விட்டார்கள். இன்னும் 2 வாரங்கள் அந்த தியேட்டர்களில் எல்லாம் அமரன் ஓடியிருந்தால் இன்னும் பல கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என்றும் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்நிலையில் கங்குவா படம் முதல் நாளில் 58 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியானது. தற்போது 2 நாட்களில் கங்குவா படத்தின் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் நாளில் 14 கோடி ரூபாய், 2வது நாளில் 6 கோடி ரூபாய் என 2 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 20 கோடி தான் கங்குவா வசூலித்துள்ளது. 2000 கோடி ரூபாய் வசூல் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொன்ன நிலையில், தமிழ்நாட்டில் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டுவதே சிரமம் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





