ஆரம்பத்தில் இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம் சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கோபி நயினார். எழுத்தாளர். நடிகர் விஜய் நடித்த கத்தி படத்தின் கதை என்னுடையது. நான் சொன்ன கதையை ஏஆர் முருகதாஸ் அவரது கதை போல படமாக்கி விட்டார் என்று புகார் எழுப்பினார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு பின் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த அறம் படம் கோபி நயினார் டைரக்ட் செய்தார். கடந்த 2017ம் ஆண்டில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை மக்களின் பாராட்டை பெற்றது. ஆழ்குழாய் கிணறுக்காக தோண்டப்பட்ட குழியில் விழும் சிறுமியை காப்பாற்றுவதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் கலெக்டர் கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார். சமுதாயத்தில் நிகழும் ஒரு சம்பவத்தில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு அரசு நிர்வாகத்தின் குளறுபடிகள் மற்றும் மெத்தனம் போன்ற சம்பவங்களை இந்த படத்தில் கோபி நயினார் அழுத்தமாக சொல்லி இருந்தார். இந்த படம் பல விருதுகளையும் வென்றது.
தொடர்ந்து கறுப்பு நகரம் என்ற படத்துக்கு கதை எழுதிய கோபி நயினார், இப்போது மனுஷி என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் போலீஸ் விசாரணையில் நடக்கும் கொடுமைகளை பற்றிய கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது அப்படிப்பட்ட ஒரு கதைதான்.
மனுஷி படம் குறித்து இயக்குனர் கோபி நயினார் கூறியதாவது, ஒரு பெண்ணை கூட்டி வந்து விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்கிறார்கள். மனம் உடல் என நோகடிக்கிறார்கள். தூங்க விடாமல் கழிப்பறை செல்ல அனுமதி மறுத்து குடும்ப உறுப்பினர்களை அவமதித்து மனரீதியாக துன்புறுத்துகிறார்கள்.
எல்லாக் குற்றங்களுக்கு பின்னாலும் அந்த நபருக்கான நியாயம் ஒன்று இருக்கிறது. குற்றங்களிலிருந்து ஒரு சமூகத்தை நாம் எப்படி மீட்க முடியும்? அதற்கான வழிகளையும் நாம் இதுவரை பேசாத உரையாடலையும் மனுஷி படம் பேசும் என்று இயக்குனர் கோபிநாத் கூறியிருக்கிறார். ஏற்கனவே வௌியான விசாரணை, ஜெய்பீம் போன்ற படங்களும் போலீஸ் விசாரணை கொடுமைகளை பேசிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





