தமிழ் சினிமாவில் இறைவி பேட்ட உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அவருக்கு சொந்தமான ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனமும் முதன்முறையாக இணைந்து நீளிரா என்ற படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தை இலங்கை தமிழர் சோமிதரன் டைரக்ட் செய்திருக்கிறார். இதில் நவீன் சந்திரா விது ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 3ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது இந்த படத்துக்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார். நீளிரா படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் படத்தின் கதாநாயகன் நவீன் சந்திரா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது, திரைப் படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. ஆனால் இயக்குனரான பிறகு நல்ல கதைகளை படமாக தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இதற்கு முன்பு நான் எடுத்த படங்களில் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் திரைப்படம் என தான் போடப்பட்டிருக்கும்.
ஆனால் நீளிரா படத்தின் தயாரிப்பாளராக என்னுடைய பெயரை சேர்க்க வேண்டும் என்று நானே கேட்டுக் கொண்டேன். இந்த படத்தின் கதைக்கும் எனக்கும் மிகப்பெரிய தொடர்புள்ளது. ஏனெனில் என்னுடைய முதல் குறும்படம் காட்சிப் பிழை. அதன் மூலமே நான் ஒரு இயக்குனராக இப்போது உயர்ந்திருக்கிறேன். காட்சிப்பிழை குறும்படம் ஒவ்வொரு ஊரிலும் விமானத்தில் பறக்கும் போது எந்த மாதிரியான உணர்வு உள்ளூர்வாதிகளுக்கு ஏற்படும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
இலங்கையில் விமானத்தில் பறக்கும் போது அவர்கள் எப்படி பயப்படுவார்கள் என்பதை அந்த குறும்படம் உணர்த்தியது. அதன் மூலமாகவே இயக்குனராக நான் உருவெடுத்தேன். நீளிரா கதையைக் கேட்டவுடன் எனக்கு வைரலிஸ்ட் என்ற ஹாலிவுட் படம் நினைவுக்கு வந்தது. வயலின் இசை மீது ஆர்வம் கொண்ட ஒருவன் போர் பதட்டம் உள்ள நேரத்தில் என்ன செய்வான் என்பதுதான் அந்த படத்தின் கதை. நிச்சயமாக இலங்கை தமிழர்கள் பற்றி இதுவரை பார்க்காத கேட்காத கதையாக இந்த படத்தின் திரைக்கதை இருக்கும்.
இலங்கையில் போர் பதட்டமான சூழ்நிலைக்கு நடுவே ஒரு திருமணமும் நடக்கிறது. அதில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதே இந்த படத்தின் உணர்ச்சியை பூர்வமான பின்னணி. இதனை இன்றைய காலகட்டத்தில் அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும். ஏனெனில் ஈரானில் சண்டை நடப்பதால் நமக்கு இங்கு கேஸ் சிலிண்டர் பிரச்சனை ஏற்படுகிறது. அதுபோல நிச்சயமாக அனைவரும் இந்த கதையை தங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியும் என்று கார்த்திக் சுப்பராஜ் பேசியிருக்கிறார்.





