தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ஜொலித்தவர் நடிகர் நாகேஷ். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் காலகட்டத்தில் இருவரது படங்களிலும் காமெடி ரோலில் மாறி மாறி நடித்து அசத்தியவர் நாகேஷ். குறிப்பாக திருவிளையாடல் படத்தில் தருமி கேரக்டரிலும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி கேரக்டரிலும் நாகேஷ் நடிப்பு வேற லெவலில் இருந்தது.
எதிர்நீச்சல் நீர்க்குமிழி போன்ற படங்களில் நாகேஷ் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். நடிகர் கமல்ஹாசன் இப்போதும் எனக்கு நடிப்பில் ஆசான்கள் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நடிகர் நாகேஷ் அவர்களும்தான் என்று அடிக்கடி நேர்காணல்களில் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம்.
நடிகர் நாகேஷின் மகன் ஆனந்தபாபு பல படங்களில் நடித்திருக்கிறார். சிறந்த நடனக் கலைஞர். நான் பேச நினைப்பதெல்லாம் முதல் வசந்தம் புரியாத புதிர் சேரன் பாண்டியன் ஆதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சினிமாவில் பெரிய அளவில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு கட்டத்தில் டிவி சீரியல்களிலும் நடித்தார்.
இந்நிலையில் நடிகர் ஆனந்தபாபுவின் மகன், நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். உருட்டு உருட்டு என்ற படத்தில் கஜேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய நடிகர் ஆனந்தபாபு, எனக்கு தந்த ஆதரவை போல, என் மகனுக்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவை வழங்க வேண்டும் என்று உருக்கமாக கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவில் பேசிய இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது, உருட்டு உருட்டு படத்தில் நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் கதாநாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நடிகர் ஆனந்த் பாபுவுடைய சூழ்நிலையை நான் கண் முன்னாடி பார்த்திருக்கிறேன். தனுஷை அறிமுகப்படுத்த தயாரிப்பாளர்களை நான் தேடிப் போகவில்லை. ஏனென்றால் நானே தயாரிப்பாளராக இருந்தேன். நானே இயக்குனராகவும் இருந்தேன்.
ஆனால் ஆனந்தபாபு நிலை அப்படியல்ல. ஆனந்தபாபு தன் மகனுக்காக ஒவ்வொரு அலுவலகத்துக்கும் நேரில் போனார். என்னுடைய அலுவலகத்திற்கும் வந்திருந்தார். என் பையன்களுடைய அலுவலகத்திற்கும் போயிருக்கிறார். அந்த தந்தையுடைய வலிக்கு நீங்கதான் நிவாரணம் கொடுக்க வேண்டும். அதுக்காக இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று இயக்குனர் கஸ்தூரிராஜா உருட்டு உருட்டு படவிழாவில் பேசியிருக்கிறார்.





