கடந்த சில நாட்களாக,தமிழ் சினிமாவில் நாள்தோறும் விவாதிக்கப்பட்டு வரும் ஒரே விஷயம் என்னவென்றால் அது நிச்சயம் லியோ படமாகதான் இருக்கும். விக்ரம் படம் வெளியானதிலிருந்து எல் சி யு கான்செப்ட்டை தூக்கிப் பிடித்த ரசிகர்கள், அது லியோவிலும் தொடருமா என்று கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், நாள்தோறும் ஒரு கதையை அவிழ்த்து விட்டு, இதுதான் லியோவில் இருக்கும் சாராம்சம் என்று சிலர் சொல்வதையும் இணையங்களில் பார்க்க முடிகிறது.

இப்படி மூச்சுக்கு முந்நூறு தடவை லியோ படம் பற்றியே ரசிகர்கள் பேசி வருவதற்கு முக்கிய காரணம், யார் என்றால் அது இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான். தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமாக விஜய் இந்த படத்தில் நடித்திருந்தாலும், அவரது ரசிகர்களையும் தாண்டி ஒட்டுமொத்தமாக இளைஞர்களை கட்டிப்போட்டிருப்பது லோகேஷ் கனகராஜின் முந்தையத் திரைப்படங்களில் இருந்த சிறப்பான திரைக்கதையும், எல் சி யு என்ற கான்செப்ட்டும்தான்.
விக்ரம் படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள், ரசிகர்கள் மீண்டும் கைதி படத்தை பார்த்துவிட்டு திரையரங்குகளுக்கு வருமாறு அன்பு வேண்டுகோள் விடுத்த போதே, லோகேஷின் மேஜிக்கை காண தயாராகிவிட்டனர் இளைஞர்கள். அதுவும் விக்ரம் பட கிளைமாக்ஸில் சூர்யாவின் வருகையும், கைதி கார்த்தியை எடுத்துரைத்த விதமும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்க, இது அப்படியே வரும் படங்களிலும் தொடர வேண்டும் என விரும்புகின்றனர்.

இதன் காரணமாகவே விஜயுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் லியோ படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறலாம். போதாக்குறைக்கு, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், சஞ்சய்தத், திரிஷா, மடோலினா செபஸ்டின், பிரியா ஆனந்த் என நட்சத்திரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால், “அப்படி படத்தில் என்ன எடுத்து வைத்திருக்கிறார் லோகேஷ்” என்ற சின்ன ஆர்வம் எழத்தான் செய்கிறது.
இப்படி இருக்க தனது முந்தைய படங்களில், கதாநாயகிகள் கழுத்து அறுத்துக் கொல்லப்படுவதை காட்சியாக வைத்திருந்த லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்திலும் அப்படி ஏதும் செய்து விடுவாரோ என்ற பயத்தில் திரிஷா ரசிகர்கள் இருந்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு மீம்ஸ்களை நம்மால் பார்க்க முடிந்தது. இந்த சூழலில், கோவையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம், மாணவர் ஒருவர் இதனையே கேள்வியாக எழுப்பினார். லியோவுல த்ரிஷா மேடத்துக்கு எதுவும் ஆகாம பாத்துக்கோங்க என்று பாசமாக அந்த மாணவர் பேச, எதுவும் ஆகாது என்று கூறி தலைவியின் ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தார் லோகேஷ் கனகராஜ்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது கனவு படம் இரும்பு கை மாயாவி தான்.10 ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த படத்தின் கதையை எழுதி விட்டேன். நேரம் வரும்போது நிச்சயம் பண்ணுவேன். லியோ படத்தில் விஜய்யின் வேலைகளை வார்த்தையால் கூறி விட முடியாது. வங்கிப் பணியில் இருந்த நான், அதை விட்டுவிட்டு இங்கு வந்ததற்கு நிறைய காரணம் இருக்கிறது.
எனக்கு சட்டையின் முதல் பட்டனை போடுவதற்கும், தாடியை ட்ரிம் செய்வதற்கும் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் வங்கிப் பணியில் அதுதான் முக்கிய விஷயமாக பார்க்கப்படும். இதனாலேயே அந்த வேலையை விட்டு விட்டு வந்தேன் என்று கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.





