வேட்டையன் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் கூலி படம் ஷூட்டிங்கில் நடித்து வந்தார். கடந்த 30ம் தேதி அவர் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு ரத்தநாளத்தில் வீக்கம் இருப்பதாக ஸ்டண்ட் வைக்கப்பட்டது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன் பிறகு 3 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருந்த ரஜினிகாந்த், நேற்று காலை வீடு திரும்பினார். இப்போது அவர் முழுமையான ஓய்வில் இருக்கிறார். இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படப்பிடிப்பில் கலந்து கொண்டதால்தான், ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக ஒரு தகவல் வைரலாக பரவியது. பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து விமர்சித்து பேசினர்.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த கூலி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, கூலி படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்து விட்டது. மீதி படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார். நேற்று இரவு அவருடன் போனில் பேசினேன்.
இதற்கிடையே இன்னொரு முக்கியமான விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள, தௌிவுப்படுத்த விரும்புகிறேன். கடந்த 40 நாட்களுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் இந்த நான்சர்ஜிக்கல் குறித்து என்னிடம் பேசினார். செப்டம்பர் 30ம் தேதி மருத்துவ சிகிச்சை செய்ய இருப்பதாக கூறினார். அதை அவர் கூறிய பிறகுதான் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை 28ம் தேதிக்குள் எடுத்து முடித்தோம்.
ஏனெனில் கூலி படத்தில் பிற மொழிகளைச் சேர்ந்த ஸ்டார் நடிகர்களும் நடிக்கின்றனர். அதனால் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை முன்பே திட்டமிட்டு 28ம் தேதிக்குள் எடுத்து முடித்தோம். பிறகு 29ம் தேதி காலை அவர் வந்து இங்கே அனைவரையும் பார்த்து விட்டுதான் சென்றார். ஆனால் சிலர் கூலி படப்பிடிப்பில் நடித்த போதுதான் ரஜினிக்கு உடல்நலம் பாதித்ததாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அருகில் இருந்து பார்த்தவர்கள் போல தவறான ஒரு விமர்சனத்தை செய்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் எல்லாரும் கொண்டாடும் ஒரு நடிகராக இருக்கிறார். அவரை நாங்கள் பத்திரமாகவும் கவனமாகவும் தான் பார்த்துக் கொள்கிறோம். அப்படி ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தொடர்ந்து பண முதலீடு செய்திருக்காது. அதேபோல் நாங்களும் சூட்டிங் நடத்தி இருக்க மாட்டோம். மருத்துவமனையில் தான் எங்கள் படக்குழு மொத்தமும் இருந்திருக்கும். இதெல்லாம் தெரியாமல் அருகில் இருந்து பார்த்தது போல் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். இது எனக்கு மனரீதியாக கடுமையான பாதிப்பை தருகிறது. உண்மை தெரியாமல் தவறான விமர்சனங்களை யாரும் கூற வேண்டாம் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.





