ஆரம்பத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர் மிஷ்கின். அப்போது அவரது பெயர் சண்முகசுந்தரம்தான். பிறகு சித்திரம் பேசுதடி என்ற படத்தை இயக்கி இயக்குனராக மாறியபோது தனது பெயரை மிஷ்கின் என மாற்றிக் கொண்டார்.
முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் தொடர்ந்து அஞ்சாதே துப்பறிவாளன் சைக்கோ என பல படங்களை இயக்கி நட்சத்திர இயக்குனராக மிஷ்கின் மாறினார். கடைசியாக அவரது இயக்கத்தில் உருவான விஜய் சேதுபதி நடித்த டிரெயின் மற்றும் பிசாசு 2 ஆகிய படங்கள் இன்னும் திரைக்கு வராமல் முடங்கிப் போய் உள்ளன.
இதற்கிடையே இயக்குனர் மிஷ்கின் திரைப்பட நடிகராகவும் மாறிவிட்டார். சவரக்கத்தி ஓ நந்தலாலா டிராகன் வணங்கான் என பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மிஷ்கின் இப்போது தனியார் டிவி ஒன்றில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருந்து வருகிறார். சிறந்த இயக்குனராக பெயர் பெற்ற மிஷ்கின் இப்போது சிறந்த நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனது முத்திரையை பதித்து வருகிறார்.
ஆனால் நடிகராக மாறிய பிறகு மிஷ்கின் சம்பளத்தை மிக அதிகமாக கேட்கிறார். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர் கேட்கும் சம்பளம் தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அதே நேரத்தில் சம்பளத்தை குறைப்பதும் இல்லை. சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக மிஷ்கின் நடந்து கொள்வது தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் அதிர்ச்சியடைய வைக்கிறது.
மேலும் சினிமா விழாக்களில் கலந்துக்கொள்ளும் இயக்குனர் மிஷ்கின் தாறுமாறாக பேசி அது விமர்சனத்திற்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக அவர் நடித்த படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் இதை மிஷ்கின் செய்கிறார். தான் நடித்த படத்தின் இயக்குனர் இயக்கிய முந்தைய படங்களில் ஒரு படத்தை கூட நான் பார்த்ததில்லை என்று கூறுவது மிஷ்கினின் வழக்கமாக உள்ளது.
பல வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் பரிமளம் அண்ட் கோ என்ற படத்தில் மிஷ்கின் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின், பாண்டிராஜன் இயக்கிய படங்கள் எதையும் நான் இதுவரை பார்த்ததில்லை என்று மேடையில் அவரை வைத்துக்கொண்டே பேசி சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறார் இப்படி தொடர்ந்து மிஷ்கின் செய்வது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





