தமிழ் சினிமாவில் இயக்குனர் பா ரஞ்சித் மிகவும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய இயக்குனராக இருக்கிறார். அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் தொடர்ந்து மெட்ராஸ் காலா கபாலி தங்கலான் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். அவரது படங்கள் சமுதாய தாக்கங்களை ஏற்படுத்தும் கதைக்களத்தில் உருவாகின்றன.
அதே நேரத்தில் நீலம் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் பா ரஞ்சித் துவங்கியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனம் வாயிலாக அவ்வப்போது பிற இயக்குனர்கள் இயக்கும் படங்களையும் தயாரித்து வருகிறார். இப்போது பாட்டல் ராதா என்ற படத்தை நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
பாட்டல் ராதா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் தினகரன் சிவலிங்கம், இயக்குனர்கள் லிங்குசாமி வெற்றிமாறன் பா ரஞ்சித் அமீர் மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் படத்தின் இயக்குனர் தினகரன் சிவலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் பேசியதாவது, பாட்டல் ராதா படத்தின் இயக்குனர் தினகரன் சிவலிங்கம் என்னுடைய கல்லூரி தோழன். நாங்கள் எல்லோரும் ஒன்றாக தான் சினிமாவுக்கு வந்தோம். முதலில் நான் இயக்குனராகி விட்டேன். தினகரனையும் ஜெயக்குமாரையும் அனிமேஷன் இயக்குனர்களாக மாறச் சொன்னேன். ஆனால் அவர்கள் சினிமா இயக்குனராக மாறிவிட்டனர். படத்தின் கதையை தினகரன் சிறப்பாக எழுதியுள்ளார்.
நான் 12ம் வகுப்பு படிக்கும் போதே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவு செய்தேன். அதற்கு காரணம் என் அப்பா தான். எனது அப்பாவுக்கு பெரிய குடிப்பழக்கம் இருந்தது. அதனால் என் அம்மா மிகவும் கஷ்டப்பட்டார். இரவு நேரங்களில் எல்லாம் என் அம்மா அழுது கொண்டே இருப்பார். இதை பார்த்து என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
ஆனால் எப்படியோ தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். என் தந்தை மிகவும் நல்லவர்தான். எங்களுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். ஆனால் குடி அவரை சீரழித்தது. அதனாலயே கிட்னி செயலிழந்து உயிரிழந்து விட்டார். குடி ஒரு நோய் என்பது புரியவே நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன் என்று பா ரஞ்சித் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





