தமிழ் சினிமாவில் ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற இயக்குனர்களில் ஒருவர் பா ரஞ்சித். அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சுவரில் வரைந்த அரசியல் தலைவரின் உருவபடம்தான் இந்த படத்தின் மைய கருவாக இருந்தது.
தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி காலா ஆகிய படங்களை பா ரஞ்சித் இயக்கினார். இந்த 2 படங்களிலுமே மாறுபட்ட ரஜினிகாந்தை ரசிகர்கள் காண முடிந்தது. வழக்கமான பில்டப் இல்லாமல் கதையின் நாயகனாக ரஜினி நடித்திருந்தார். குறிப்பாக இதுபோன்ற வித்யாசமான கதைக்களத்தில் நடிக்க வைத்ததே பா ரஞ்சித்துக்கு கிடைத்த வெற்றியாக பாராட்டப்பட்டார்.
ஆனால் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்த படம் நிறைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில், பா ரஞ்சித் ஒரு தரமான படமாக தங்கலான் படத்தை தர தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் இந்த படத்தை பொருத்த வரை சியான் விக்ரம் பார்வதி மாளவிகா மோகன் பசுபதி என படத்தில் நடித்த அனைவருமே நடிப்பில் உச்சம் தொட்டிருந்தனர். அதுவும் விக்ரம் நடிப்பு ரசிகர்களை மிரட்டியது. அந்தளவுக்கு தங்கலான் படத்தில் கலைஞர்களின் உழைப்பு திரையில் தெரிந்தது.
கடந்தாண்டில் மலையாளத்தில் வெளியாகி, தமிழ்நாட்டில் வசூலில் சக்கைப் போடு போட்ட படம் மஞ்சும்மெல்ஸ் பாய்ஸ். இந்த படம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் கூறியதாவது, மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தை நான் தியேட்டரில் போய் பார்க்கும்போது மக்கள் என்ஜாய் பண்ணிய விதம் எனக்கு ரொம்பவும் புதுசாக இருந்தது. மொழி என்ற விஷயம் அங்கே உடைக்கப்பட்டது. அது ஒரு தமிழ் மொழி படமும் கிடையாது. அது ஒரு டைரக்ட் மலையாள படம்.
அந்த படத்தில் லவ் எல்லாம் இருக்கவே இருக்காது. இயக்குனர் பிரண்ட்ஸோட எமோஷன்ஸ் யூஸ் பண்ணி இருப்பார். ஆண்களுக்குள்ள இருக்கிற காதலை தான் அவர் காட்சிப்படுத்தி இருப்பார். அதோட கிளைமாக்ஸ்ல அவர் யூஸ் பண்ண அந்த பாடலுக்கும், நம்ம தமிழ் ஆடியன்ஸுக்கும் இருக்கிற கனெக்சன் ரொம்ப காலமாக இருக்கிறது. அதை இயக்குனர் சிதம்பரம் சரியாக பயன்படுத்தி விட்டார் என்றுதான் நான் சொல்லுவேன் என்று பா ரஞ்சித் கூறியிருக்கிறார்.





