தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத்குமார். அவரது சினிமா பயணத்தில் காதல் கோட்டை படம்தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை அவர் கொடுத்தார். இப்போது குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு 2026ம் ஆண்டில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் அஜீத்குமார் கெஸ்ட் ரோலில் நடித்த படம் நீ வருவாய் என. இந்த படத்தில் பார்த்திபன் தேவயானி ரமேஷ் கண்ணா சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வரே வரவேற்பை பெற்று ராஜகுமாரனுக்கு பெரிய வெற்றியை தேடித் தந்தது.
அதன்பிறகு விண்ணுக்கும் மண்ணுக்கும் காதலுடன் திருமதி தமிழ் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் இயக்கிய 4 படங்களிலுமே தேவயானிதான் நாயகியாக நடித்திருந்தார். நீ வருவாய் என படத்துக்கு பிறகு மற்ற 3 படங்களும் படுதோல்வி அடைந்தன. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திருமதி தமிழ் கடுகு போன்ற படங்களில் ராஜகுமாரன் நடித்தும் இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, நீ வருவாய் என படத்துக்கு பிறகு அஜீத்குமார் எங்களை ஒரு ஆண்டு காலம் காத்திருக்க சொன்னார். ஆனால் அதை நாங்கள் கடைபிடிக்கவில்லை. நானும் தேவயானியும் நிறைய கமிட்மெண்ட்ஸ் வைத்து இருந்ததால் ஒரு புதிய படம் தொடங்க திட்டமிட்டோம்.
இதை தெரிந்துக்கொண்ட அஜீத்குமார், நீங்க இந்த படம் பண்ணக்கூடாது. பண்ணினால் நானே சூட்டிங்கை நிறுத்தி விடுவேன். எனக்கு ஒரு படம் பண்ணிட்டு இதை பண்ணுங்க என்று முக்கியமான அறிவுரையாக சொன்னார்.அவர் விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து நாங்கள் சூட்டிங்கை தொடங்கினோம்.
ஆனால் 40 கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரிலேயே அஜீத்குமார் வந்துவிட்டார். மதியம் வரை அங்கேயே இருந்தார். அதன்பிறகு நான் அவ்வளவு சொன்ன பிறகும் நீங்க படம் ஸ்டார்ட் பண்ணிட்டீங்க. நீங்க கஷ்டப்படப் போறீங்க. தலையெழுத்தை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் சொன்ன மாதிரியே அந்த படம் தோல்வி படமாகி விட்டது. அவர் சொன்னதை கேட்காமல் விட்டது தவறு என்று அந்த நேர்காணலில் ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.





