சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, காதலை மோதலுடன் கலந்து கட்டி கூறிய ராஜேஷிற்கு, இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. படத்திற்கு பக்க பலமாக இருந்த சந்தானம், தனக்கே உண்டான டைமிங் காமெடியில் வெளுத்து வாங்கி அசத்தினார்.

நடிகர் சந்தானத்திற்கும் சரி, ஜீவாவிற்கும் சரி சிவா மனசுல சக்தி திரைப்படம் மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்தது. இந்தப் படத்திற்கு பிறகு சந்தானத்துடன் வலுவான கூட்டணியை ஏற்படுத்திய ராஜேஷ், அடுத்தடுத்த படங்களில் அவருக்கு மிகச் சிறந்த காமெடி ரோல்களை கொடுத்தார்.
தனது இரண்டாவது திரைப்படமான பாஸ் என்ற பாஸ்கரனில், நல்லதம்பி கதாபாத்திரத்தில் நடித்த சந்தானம், ஒவ்வொரு காட்சியிலும் சிக்ஸர் விளாசி ரசிகர்களை சிரிப்பில் மூழ்கடித்தார். ஆர்யாவுடன் அவர் செய்த லூட்டி, திரையரங்குகளில் விசில் சத்தம் போட வைக்க பாஸ் என்கிற பாஸ்கரன் வாகை சூடியது.

இதன் பின்னர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினை கதாநாயகன் ஆக்கினார் ராஜேஷ். ஒரு கல் ஒரு கண்ணாடி என்னும் பெயரில் திரைப்படம் வெளியாகி, வசூல் வேட்டையாட சந்தானத்தின் பார்த்தா கதாபாத்திரம் பட்டித் தொட்டி எங்கும் பேசப்பட்டது. தொடர்ந்து மூன்று திரைப்படங்களிலும், நகைச்சுவையைக் கையில் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த ராஜேஷை பலரும் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
இதன் பிறகு கார்த்தி சந்தானம் கூட்டணியில் ராஜேஷ் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் தோல்வியை சந்தித்தது. பின்னர் அவர் எடுத்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க திரைப்படமும் வசூலில் சறுக்க, ஹீரோவான காமெடி நடிகர் சந்தானம் வேறொரு பாதையில் பயணித்தார். சந்தானத்துடன் கூட்டணியை முறித்துக் கொண்ட ராஜேஷிற்கு, அதன் பின்னர் வெளியான அத்தனை திரைப்படங்களும் படு தோல்வியையே கொடுத்தன.
கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்ள என அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்ததால், வெற்றியை கொடுக்க முடியாமல் தடுமாறி வரும் ராஜேஷ், தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பிரியங்கா மோகன் நடிக்க இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. காமெடியில் இருந்து சற்று விலகி, அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில் பூமிகா சாவ்லா என்பவர் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடிக்கிறாராம். படத்தின் சூட்டிங் பணிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





