தனுஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ராயன். அவரின் ஐம்பதாவது திரைப்படமாக உருவான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
ஆனால் விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பலரையும் கவர்ந்தது என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இதற்கு முன்னதாக பவர் பாண்டி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்த தனுஷ், அதில் காதலின் உன்னதத்தை மிக அருமையாக காட்சிப்படுத்தி இருந்தார். உணர்வுபூர்வமாகவும் அந்த திரைப்படம் அமைந்தது.
குறிப்பாக ராஜ்கிரன் மற்றும் ரேவதி இருவரும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருந்தனர். இதன் காரணமாக இயக்கத்திலும் தனுஷ் பட்டையை கிளப்பி இருப்பதாக பலரும் கூறினர். ஆனால் அதனை ராயன் திரைப்படத்தில் தனுஷ் மிஸ் செய்தார் என்றுதான் கூற வேண்டும். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி, ஏதோ வந்த போக்கில் சென்று கொண்டிருந்தது.
அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பகைதான் என்ற அதரப்பழசான கதையை அவர் தூசி தட்டி எடுத்ததுதான் இதற்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும் ராயன் திரைப்படம் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இளைஞர்களை மையமாக வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.
இதில் தனுஷின் சகோதரி மகன் ஆன பவிஷ் நடித்துள்ளார். இதுபோக அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கிறார்கள். நவீன காலத்தில் இன்றைய இளைஞர்களின் காதல் எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தியே இதன் கதை நகர்வதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இதிலிருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இப்படியான சூழலில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





