கடந்த கால திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் பெருகிவிட்டன என்றும் சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் நாட்டில் போதை கலாசாரம் பெருகி விட்டது என்றும் குற்றச்சாட்டு அதிகரித்தது. இந்த சூழலில் தான் மக்களை பாதுகாப்போம், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியம். போதை கலாசாரத்தை ஒழிப்போம் என்று வாக்குறுதி தந்து தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தார்.
ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த 10 நாட்களிலேயே கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையிலும் மக்கள் மத்தியில் அதிர்ச்சி குறையவில்லை.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து சீமான் கூறுகையில், தவெக ஆட்சியிலும் குழந்தைகள் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் தனி உரிமையையும் உறுதி செய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல. அது சுடுகாடு என்றும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் கோவை சம்பவம் குறித்து இயக்குனர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, நல்லா யோசிக்க தெரிந்தவர்கள் ஆட்சியை குறை சொல்ல மாட்டார்கள். யார் ஆட்சியாக இருந்தாலும். எதிலிருந்து இந்த குற்றங்கள் உருவாகிறது என யோசிப்பது அவசியம். மதுவும் போதையும் இதன் மூலகாரணங்கள்.
மக்களின் அஜாக்கிரதை பயன்படுத்தும் போனில் உள்ள பலவீனங்கள் கடுமையான சட்டமின்மையே இதன் பெரும் பலவீனம். இதில் ஆட்சியும் காவல் துறையும் என்ன செய்யும்? எல்லா வீட்டிலும் காவலர்கள் நிறுத்த முடியுமா? மக்கள் முதல்வரிடம் வைக்க வேண்டிய கோரிக்கை, கடுமையான சட்டத்தை அமுல்படுத்த முன்மொழிவதும் குடிமக்களின் சிந்தனையை சிதற வைக்கும் மதுவையும் போதையையும் அழிப்பது தான்.
எந்த காரணங்களுக்காக நாம் ஆட்சியை குறை சொல்லுகிறோம் என்கிற நேர்மை அவசியம். இது திமுக அதிமுக நாதக தவெக எல்லாவற்றிற்கும் சேர்த்து தான் என்று அந்த பதிவில் இயக்குனர் சேரன் பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சீமானின் கடும் விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் விதமாக இயக்குனர் சேரன் இந்த பதிவை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.





