இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சீமான். பிறகு தம்பி, பாஞ்சாலங்குறிச்சி போன்ற சில படங்களை அவரே இயக்கினார். பிறகு எவனோ ஒருவன், மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம் போன்ற சில படங்களில் நடித்தார். பிறகு நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் கட்சியை துவங்கி, தீவிர அரசியல் களத்தில் பணிசெய்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி துவங்கியது முதல் சீமான், தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியோடும் கூட்டணி வைக்காமல் ஒவ்வொரு முறையும் தனியாக நின்று சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து வருகிறார். ஆனால் கணிசமான ஓட்டுகளை பெறும் அவரது கட்சி இதுவரை எதிலும் வெற்றி பெறவில்லை.
ஆனால் உண்மையில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், பரிசுப் பொருள் தராமல் நேர்மையாக ஓட்டு பெற்று வரும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என்றால் அது மிகையல்ல. உண்மையில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்காளர் அளிப்பதுதான் நேர்மையான ஜனநாயக ஓட்டு என்றும் அரசியல் விமர்சகர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
ஆனால் சமீபகாலமாக நாம் தமிழர் கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகளை மட்டுமே வாங்கிவிட்டு, பதவிக்கு வர முடியாது என்பதால் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கியுள்ள விஜய் கட்சிக்கு பலரும் தாவி வருவதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த சீமான், விஜயையும், அவரது கட்சியையும் சமீபமகாலமாக தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்தை, போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சீமான் நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தார். அப்போது இன்றைய தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாகவும் சீமான் பிறகு தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், வருகிற சட்டசபை தேர்தலில் தனக்கு ரஜினி ஆதரவாக வாய்ஸ் தர வேண்டும் என்று இந்த சந்திப்பின் போது சீமான் ரஜினியிடம் கோரிக்கை விடுத்ததாக ஒரு தகவல் பரவியது.
தற்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒருமுறைதான் நானும் ரஜினியும் ஒன்றாக நின்றோம். அதற்கே ஐயோ ஐயோ என்று சிலர் குதிக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா, ரஜினிகாந்த் சினிமாவில் சூப்பர் ஸ்டார். நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டார்களும் நேரில் சந்தித்தவுடன் பயந்து விட்டார்கள் என்று சீமான் பேசியிருக்கிறார். விஜய் நடத்திய அரசியல் மாநாட்டுக்கு பிறகு சீமான், இப்படி தாறுமாறாக பேசி வருவதாக அவரது கட்சியினரே புலம்புகின்றனர்.





