இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் தக்லைஃப். கடந்த 5ம் தேதி வெளியான இந்த படத்தில் திரிஷா அபிராமி அசோக் செல்வன் நாசர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். நாயகன் படத்துக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து கமல் மணிரத்னம் இணைந்த படம் இது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள தக்லைஃப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தக்லைஃப் படம் கடந்த 5ம் தேதி வெளியான நிலையில் 3 நாட்களில் இதுவரை உலகளவில் ரூ. 32 கோடி என்கிற அளவில் வசூலை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 26 கோடி ரூபாய் வரை 3 நாட்களில் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பும் ஆதரவும் இந்த படத்துக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தக்லைஃப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விட்டன.
குறிப்பாக தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய முத்தமழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த பாடலை தக்லைஃப் படத்தில் பாடகி தீ பாடிய நிலையில், அவர் இசை வெளியீட்டுக்கு வர இயலாத சூழலால், சின்மயி அந்த பாடலை மேடையில் பாடி இருந்தார். அவர் பாடிய முத்தமழை பாடலுக்கு பலத்த வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் பாடிய அந்த வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலானது.
இதையடுத்து தக்லைஃப் ஆல்பத்தில் 10வது பாடலாக சின்மயி தனது சொந்த குரலில் பாடிய சின்மயி வெர்ஷன் முத்தமழை பாடல் இணைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்துவரும் நிலையில், இந்த பாடலை சினிமா பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் முத்தமழை பாடல் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் செய்துள்ள பதிவில் கூறி இருப்பதாவது, ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் உயிரில் மின்சாரம் பாய்ந்து… கேட்டது முதல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால் – நம் ஏஆர் ரகுமான் அவர்களால் மட்டுமே முடியும் என்று அவர் அந்த பதிவில் இசைப்புயல் ஏஆர் ரகுமானை பாராட்டி இருக்கிறார்.





