தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். கடந்த 30 ஆண்டுகளில் 15 படங்கள் வரை டைரக்ட் செய்திருக்கிறார். கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்கள் மட்டுமே பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் ஷங்கர் இயக்கிய மற்ற படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன.
குறிப்பாக ஜெண்டில்மேன் முதல்வன் காதலன் சிவாஜி எந்திரன் ரோபோ 2.0 இந்தியன் அந்நியன் நண்பன் பாய்ஸ் ஐ போன்ற பல படங்கள் ஷங்கர் இயக்கத்தில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்திருக்கின்றன. அடுத்ததாக இந்தியன் 3 படத்தை இயக்கும் ஷங்கர் வேள்பாரி நாவலை படமாக்கும் திட்டத்திலும் இருந்து வருகிறார்.
ஆரம்பத்தில் சினிமாவில் டைரக்டர் ஆவதற்கு முன் நடிகர் விஜயின் அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஷங்கர். பல படங்களில் அவருடன் இணைந்து பணிசெய்திருக்கிறார். சில படங்களில் சில காட்சிகளில் ஷங்கர் நடித்தும் இருக்கிறார். எஸ்ஏசி வீட்டில் நடந்த ஸ்டோரி டிஸ்கஷனிலும் ஷங்கர் அப்போது பலமுறை பங்கேற்றிருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, ஒருதடவை எஸ்ஏசி சார் வீட்டில் டிஸ்கசன் நடந்தது. அவர் கூட நாங்கள் எல்லோரும் டிஸ்கஷனில் ஒரு ரூமில் இருக்கிறோம். அப்போது மாடியில் ஒரே சண்டை. கன்னாபின்னா என்று சத்தமாக இருந்தது. உடனே எஸ்ஏசி சார் எந்திரிச்சு என்ன பிரச்னைன்னு பார்க்க மாடிக்கு போனார். நாங்கள் எல்லாம் என்னமோ ஏதோன்னு பயந்துட்டு உட்கார்ந்துட்டு இருக்கோம்.
அப்பவும் ஆய்ஊய்ன்னு ஒரே சத்தம். அப்பாவுக்கும் விஜய்க்கும் பயங்கரமான சண்டை நடக்குது. பார்த்தா ரெண்டு பேரு எஸ்ஏசி சாரை கையை பிடிச்சு படிக்கட்டுல இறங்கி இழுத்துட்டு வர்றாங்க. நாங்க எல்லாம் என்ன இது அப்பாவுக்கும் பையனுக்கும் பயங்கர சண்டை என அதிர்ச்சியா பார்த்துட்டு இருக்கோம்.
அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து எஸ்ஏசி சார் உள்ளே வந்தார். அப்போ தான் அவர் சொன்னார். ஊசி போட்டுக்க போக மாட்டேங்கறான் என்றார். அப்போதுதான் இது விஜய் ஊசி போட்டுக்கொள்ள மறுத்ததால் வந்த சண்டை என்று எங்களுக்கே தெரிய வந்தது என்று அந்த நேர்காணலில் இயக்குனர் ஷங்கர் கூறினார். அப்போது நடிகர் விஜய் அருகில் அமர்ந்து சிரித்தபடி அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தார்.





