இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் இயக்குனர் சிம்பு தேவன். 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் வடிவேலு இரட்டை கதாபாத்திரங்களில் நாயகனாக நடித்திருந்தார். மன்னர்கள் காலத்தை மையப்படுத்தி நகைச்சுவையைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. மேலும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் முதன்முதலாக வெளியான இந்த திரைப்படம், வசூலையும் வாரி குவிக்க தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக மகுடம் சூடியது.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் பெரிதும் கவனிக்கப்பட்ட இயக்குனர் சிம்பு தேவன், அடுத்ததாக அறை எண் 305 ல் கடவுள் என்னும் திரைப்படத்தை எடுத்தார். நகரத்தில் நசுக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையில் திடீரென கடவுள் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒற்றை வரியை களமாக கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. பிரகாஷ் ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானாலும், அன்றைய தேதியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் வைத்து இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் எனும் திரைப்படத்தை எடுத்தார் சிம்பு தேவன். தமிழ் திரையுலகில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளியான இந்த கௌபாய் திரைப்படத்தை பலரும் பாராட்டினர். இருப்பினும் வசூலில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் கோட்டை விட்டது. இதன்பிறகு அருள் நிதியை வைத்து கன்னியும் மூன்று களவாணிகளும் எனும் படத்தை எடுத்த சிம்பு தேவன், அடுத்ததாக விஜயுடன் புலி படத்தில் இணைந்தார்.

விஜயுடன் மூத்த நடிகை ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்த இந்தத் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. பெரும் பொருட்செலவில் ஃபேண்டஸி ஜானரில் உருவாகிய இந்த திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியதால் இணையத்தில் நகைப்புக்கு உள்ளாகியது. பலரும் நடிகர் விஜய்யையும், இயக்குனர் சிம்பு தேவனையும் கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டனர். புலி திரைப்படம் திரையரங்குகளை விட இணையத்திலேயே அதிகமாக பேசப்பட்டது.
புலி திரைப்படத்தின் தோல்வியால் சோர்ந்து போன இயக்குனர் சிம்பு தேவன், ஆறு வருட இடைவெளிக்கு பிறகு கசடதபற படத்தை எடுத்தார். அந்தாலஜி திரைப்படமாக உருவாகிய கசடதபற, விமர்சன ரீதியாக பெரிதும் பேசப்பட்டது. துவண்டு கிடந்த சிம்பு தேவனுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் திரைப்படம் அமைந்தது என்றே கூறலாம். இதைத்தொடர்ந்து விக்டிம் என்னும் அந்தாலஜி படத்திலும் சிம்பு தேவன் பங்களித்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முழு நீள திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி இருக்கிறார். இதற்காக நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிடம் அவர் கதை சொல்லி இருப்பதாகவும், கதை பிடித்துப் போனதால் இருவரும் விரைவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு போட் என்னும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தை வடிவேலுவுடன் மீண்டும் எடுத்து அது பாதியிலேயே நின்று போனதால் மன உளைச்சலில் இருந்தார் சிம்பு தேவன். தற்போது யோகி பாபு உடனான படம் மூலம் அவர் நிச்சயம் மீண்டு வருவார் என பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.





