ஆரம்பத்தில் இயக்குனர் வசந்த் இயக்கிய ஆசை நேருக்கு நேர் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் எஸ்ஜே சூர்யா. பிறகு அஜீத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த வாலி படத்தை டைரக்ட் செய்து இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை தந்தது.
தொடர்ந்து அடுத்து நடிகர் விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தை எஸ்ஜே சூர்யா இயக்கினார். இந்த படமும் இளம் வயதினர் இன்றும் கொண்டாடும் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த 2 படங்களின் மூலம் நட்சத்திர இயக்குனராக மாறிய எஸ்ஜே சூர்யா தொடர்ந்து பல படங்களை இயக்கினார். அவரே கதாநாயகனாகவும் நடிக்க துவங்கி விட்டார்.
சில பிரச்னைகளால் 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்த எஸ்ஜே சூர்யா மீண்டும் இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு ஸ்பைடர் மாநாடு ராயன் இந்தியன் 2 மெர்சல் கேம் சேஞ்சர் என பல படங்களில் வில்லனாக நடித்த அவர் இப்போது வெளியான எல்ஐகே படத்திலும் நடித்திருக்கிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் எஸ்ஜே சூர்யா பேசியதாவது, எல்ஐகே படத்தில் என்னை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் புதுமையான விஷயங்களை கையாண்டார். நீங்க வந்தா நல்லா இருக்கும். இல்லேன்னா போட்ட ஷெட் எல்லாம் வீணாகிடும்.
ரொம்பவும் காசு நஷ்டம் ஆகிடும். இருந்தாலும் பரவாயில்லை. இப்படி சொல்லி சொல்லியே என்னை அன்பு டார்ச்சர் செய்து எல்ஐகே படப்பிடிப்புக்கு என்னை வர வைத்து வேலை வாங்கி விட்டார் விக்னேஷ் சிவன். நிச்சயமாக நீங்க பெரிய ஆளாகிடுவீங்க என்று நான் வாழ்த்திய பிரதீப் ரங்கநாதன் ஜீரோவில் இருந்து ஹீரோவாகி வந்து நிற்பது நெஞ்சுக்கு நிறைவாக இருக்கிறது.
தொழில்நுட்பத்தில் முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் புதுமையான விஷயங்கள் அவசியம். அந்த வகையில் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது தான். ஆனால் அதற்காக அதிலேயே மூழ்கி விட வேண்டாம் என்று தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம் என்று இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.





