நடிகர் வடிவேலு காமெடி நடிகராக இருந்தாலும் பல படங்களில் குணச்சித்திர நடிப்பிலும் அசத்தி இருக்கிறார். காமெடிக்கு இடையே வரும் டச்சிங் ஆன சில காட்சிகளிலும் பூரணத்துவமான தனது அழுத்தமான நடிப்பை பல படங்களில் அவர் தந்திருக்கிறார். குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் வித்யாசமான நடிகராக வடிவேலுவை மக்கள் ரசித்தனர்.
தொடர்ந்து அதுபோன்ற அழுத்தமான கேரக்டர்களே வந்ததால் நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு மீண்டும் காமெடி நடிப்பில் தனது முழுகவனத்தை செலுத்தினார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவரது காமெடி நடிப்பு ரசிகர்களிடம் எடுபடவில்லை. பெரிய அளவில் எதிர்பார்த்த சந்திரமுகி 2 நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கேங்கர்ஸ் போன்ற படங்களில் காமெடியால் பழைய இடத்தை வடிவேலு பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இப்போது மீண்டும் வித்யாசமான ஒரு கதைக்களத்தில் நடிகர் வடிவேலு நடித்திருக்கிறார். அவருடன் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாரீசன் படம் வருகிற 25ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் மிக வித்யாசமான கதைக்களத்தில் வடிவேலு பகத் பாசில் நடித்திருக்கின்றனர்.
பணக்காரர் வடிவேலு பெரிய தொகையை வைத்திருக்கிறார். அதை ஏடிஎம் சென்டரில் கவனித்து விடும் பகத் பாசில், அந்த பணத்தை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்று திட்டம் போடுகிறார். வடிவேலு, பகத் பாசில் இருவரும் திருவண்ணாமலை முதல் நாகர்கோவில் ஒன்றாக பைக்கில் பயணிப்பதுதான் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. ஆனால் வித்யாசமான கதைக்களத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாரீசன் படத்தின் இயக்குனர் சுதீஷ் சங்கர் கூறியதாவது, மாரீசன் படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டு வடிவேலு வெளியில் வரும்போது, இதில் வடிவேலுவே இல்லையே என்றார். ஷூட்டிங் களத்திலும் பழைய வடிவேலு இதுல வந்து குதிக்கலையே என்றும் என்னிடம் விசாரித்துக் கொள்வார். சில விஷயங்களில் அவரது பழைய உடல் மொழி வந்துடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்போம்.
அதனால் இந்த மாரீசன் கதையை அவர் நன்றாக புரிந்துகொண்டு அந்த வடிவேலு வந்து விடக்கூடாது என்பதில் அவரே கவனமாக இருந்தார். வடிவேலு இதுவரை செய்யாத ஒரு சேலஞ்சிங்கான ரோலில் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் உண்மையான உணர்வோடு சொல்வதாக இருந்தால், வடிவேலு பண்ண வேண்டிய கேரக்டரில் பகத் பாசில் செய்திருக்கிறார். பகத் பாசில் பண்ண வேண்டிய கேரக்டரில் வடிவேலு செய்திருக்கிறார். இதுவரை பாராத ஒரு புத்துணர்வு இரண்டு பேர் நடிப்பிலும் இருந்தது என்று மாரீசன் படத்தின் இயக்குனர் சுதீஷ் சங்கர் கூறியிருக்கிறார்.





