தமிழ்நாட்டில் பிற மாநில நடிகர்களுக்கும் வெகுவாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது பகத் பாசிலுக்குத்தான். மற்ற பிற மாநில நடிகர்களை விரும்புபவர்கள் இங்கு இருந்தாலும், பகத் பாசிலுக்கு என தனி ஒரு கூட்டம் இருக்கிறது. இணையத்திற்கு சென்றாலே இந்தப் பெரும் கூட்டம் பற்றி தெரிந்து விடும்.
தனது அசுரத்தனமான நடிப்பின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் அவர் இடம் பிடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். தனக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதன் முதல் பாதியில் அவருக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சொல்லப்போனால் கதையை நடத்தும் காரணியாக அவர் செயல்பட்டு இருப்பார். இப்படி விக்ரம் திரைப்படமும் பாசிலுக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்க அடுத்ததாக மாமன்னன் படத்தில் வந்தார்.
சாதி வெறி பிடித்த வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை மாமன்னனின் ஃபகத் பாஸில் வெளிப்படுத்தினார். படம் வெளிவருவதற்கு முன்னர் பலரும் வைகைப்புயல் வடிவேலுவின் கதாபாத்திரத்தை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதை எல்லாம் ஓரம் கட்டி விட்டு, தனது கண்களாலேயே மிரட்டினார் பகத் பாசில்.
இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கும் வைகைப்புயல் வடிவேலுக்கும் மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கோவை சரளாவும் நடித்துள்ளார். மாரீசன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை, சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படம் குறித்து பேசி இருக்கும் இயக்குனர், நாகர்கோயிலுக்கும் பொள்ளாச்சிக்கும் இடையேயான பயணத்தை தான் இந்த திரைப்படம் கூறுகிறது. ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படத்தின் கதையை எழுதி இருக்கிறேன். அதில் மாரீசன் என்னும் அரக்கன், மான் வேடமிட்டு சீதை லட்சுமண ரேகையை கடக்க காரணமாக அமைவார். அதேபோன்று இந்த திரைப்படத்திலும், இடைவேளையின் போது தான் யார் அரக்கன் என்பது வெளிப்படும் என தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படம், வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.





