தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து வருகிறார். கடந்தாண்டில் அவர் இயக்கி நடித்த அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான மதகஜ ராஜா படமும் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதில் கடந்த 2012ம் ஆண்டில் விஷால் அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மதகஜ ராஜா படம் 12 ஆண்டுகள் கழித்துவந்து வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது இயக்குனர் சுந்தர் சி நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனர் சுந்தர் சி படங்களை இயக்குவது மட்டுமின்றி நடிகராகவும் இருக்கிறார். பல படங்களில் அவர் நடித்து அந்த படங்களும் மாஸ் ஹிட் ஆகியிருக்கின்றன. அதே போல் மனைவி குஷ்புவுடன் இணைந்து அவ்னி சினிமேக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் சுந்தர் சி நடத்தி வருகிறார். அவ்வப்போது நேர்காணல்களில் தனது குடும்பம், சினிமா குறித்து சுந்தர் சி பேசுவது வழக்கமாக உள்ளது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, இது எல்லா பசங்களுக்கும் சொல்றேன். நாங்க எல்லாம் உட்கார்ந்து வீட்டுல பேசிட்டு இருப்போம். அப்போ எங்க அப்பா ஆசையா எங்ககிட்ட பேச வருவார். அவர் வந்த உடனே நாங்க எல்லாம் எழுந்திரிச்சு போயிடுவோம். அதுதான் மரியாதை என்று நாங்க நினைச்சுக்கிட்டோம். அப்பா முன்னாடி உட்கார கூடாதுன்னு அப்படி இருந்துட்டோம்.
அப்புறம்தான் தெரிஞ்சுதான், அவர் எல்லார் கூடவும் உட்கார்ந்து சந்தோஷமா பேச ஆசைப்பட்டிருக்கிறார். இப்போ பார்த்தீங்கன்னா என்னோட பர்ஸ்ட் பிரண்ட்ஸ் என்னோட பசங்கதான். எங்கப்பாவை நான் ஒதுக்கின மாதிரி என் பசங்க என்னை ஒதுக்கிட கூடாது. நான் பார்த்த ஒரு ஜெண்டில்மேன் என்னோட அப்பா தான்.
மிலிட்டரி இருந்தவர் என்பதால் ரொம்பவும் டிசிப்ளனாக இருப்பார். எல்லாத்தையும் கவனமாக பார்த்துக்குவார். தங்கமான மனிதர். அவருக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். டெஸ்ட் மேட்ச் நடந்தா பார்க்க வந்துடுவார். அவர் வாழ்க்கை முழுவதும் ரொம்பவும் கஷ்டப்பட்டார். அவரை இப்போ ராஜா மாதிரி வெச்சு பார்த்துக்க என்னால் முடியும். ஆனால் அவர் இப்போது இல்லை என்று இயக்குனர் சுந்தர் சி தனது அப்பா குறித்து பேசியிருக்கிறார்.





