டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நடிகர் பரத். முதல் படத்திலியே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து செல்லமே படத்தில் இளம் வயது வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் விஷால் – ரீமாசென் ஜோடியாக நடித்திருந்தனர்.
அடுத்து நடிகர் பரத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக தமிழ் சினிமாவில் அமைந்த படம் காதல். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய அந்த படத்தில் பரத், மெக்கானிக் முருகனாக வாழ்ந்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, பரத்துக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
தொடர்ந்து சிவகாசி, திருப்பாச்சி ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் பேரரசு இயக்கத்தில் பழனி என்ற படத்தில் பரத் நடித்தார். அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் பரத்துக்கு சின்ன தளபதி என்ற பட்டத்தை, டைரக்டர் பேரரசு டைட்டிலில் கொடுத்திருந்தார்.
தொடர்ந்து ஏப்ரல் 14, சேவல், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, எம்டன் மகன், கூடல் நகர், வெயில், ஸ்பைடர், அரவாண் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பரத்துக்கு ஒரு கட்டத்துக்குப் பிறகு பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனது. அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இப்போது நடிகர் பரத் டைரக்டர் முத்தையா இயக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
நடிகர் பரத் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசுகையில், சினிமாவை பொறுத்தவரை இயக்குனர்கள் நல்ல முறையில் படத்தை இயக்கினால் தான் அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறும். கடைசி பெஞ்ச் கார்த்திக், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியசாலை போன்ற படங்களில் நடிக்கும் போது டைரக்டர் சொதப்புகிறார் என்பது தெளிவாகத் தெரியும். இருந்தாலும் காசுக்காக நடிக்க வேண்டிய சூழ்நிலையில் அப்படியே நடித்திருக்கிறேன்.
பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டத்தை தூக்கி போட்டு விட்டார்கள் அதனால் சின்ன தளபதி என்ற பட்டத்தை நான் சமீப காலமாக பயன்படுத்துவதில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் பரத். இப்போது ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் என்ற படத்தில் ஆட்டோ டிரைவராக பரத் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





