தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகையும் சதாவும் அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்று ஜெயம் ரவிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர்.
தொடர்ந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி தீபாவளி தனி ஒருவன் போகன் பேராண்மை அடங்க மறு சந்தோஷ் சுப்ரமணியம் உனக்கும் எனக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ஜெயம் ரவி முன்னணி நடிகராக மாறினார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி தேவன் கேரக்டரில் நடித்து பாராட்டை பெற்றார்.
ஆனால் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த படங்கள் பெரிய தோல்வியை கண்டன. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இறைவன், அகிலன், சைரன் 108 ஆகிய படங்கள் பிளாப் படங்களாக இருந்தன. என்னிடம் கதையை சொல்வது போல், இயக்குனர்கள் படமாக்குவதில்லை. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிறது என்று ஜெயம் ரவியே கூறியிருந்தார்.
ஆனால் தீபாவளிக்கு வெளியான ஜெயம் ரவி நடித்த பிரதர் படமும் தோல்வி படமாக இருந்தது. ஒரு கல் ஒரு கண்ணாடி சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கிய இந்த படமும் படுதோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தின் மொத்த வசூலே ரூ. 12 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் மட்டுமின்றி, குடும்ப வாழ்க்கையிலும் பலத்த சரிவை சந்தித்தவர் ஜெயம் ரவி. தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவியான ஆர்த்தி என்பவரை பல ஆண்டுகள் காதலித்து, கடந்த 2009ம் ஆண்டில் ஜெயம் ரவி திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், சமீபத்தில் ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.
மேலும், சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆர்த்தியை விவாகரத்து செய்யவும் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நடிகர் ஜெயம் ரவி கோர்ட்டுக்கு வந்து நீதிபதி முன்பு நேரில் ஆஜரானார். ஆர்த்தி, காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்த்தியும் ஜெயம் ரவியும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார். இன்றே இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.





