இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக பதிவு செய்திருக்கிறது டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஏற்கனவே இவர் இதே தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.
மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வெற்றிவாகை சூடியது. நவீன யுகத்தில் இளைஞர்கள் அனைவரும் செல்போன் கையுமாக இருக்க, காதலர்களுக்குள் அந்த செல்போனை பகிர்ந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை தான் இந்த திரைப்படம் கூறுகிறது.
அதில் ஆங்காங்கே ரசனைகளை அள்ளி தெளித்து ஒரு சூப்பர் பேக்கேஜாக இந்த திரைப்படத்தை அவர் கொடுத்திருந்தார். இதன் பிறகு நடிப்பில் மட்டும் திடீர் கவனம் செலுத்திய பிரதீப் ரங்கநாதன், தனது நண்பரும் ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கியவருமான அஸ்வந்த் மாரிமுத்து உடன் கை கோர்த்தார்.
இவர்களின் கூட்டணியில் உருவானதுதான் டிராகன் திரைப்படம். கல்லூரி வாழ்க்கையில் பெண்களுக்கு பிடித்தபடி ரௌடியாக இருப்பதுதான் கெத்து என்று நம்பும் இளைஞர், குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேற ஒரு கட்டத்தில் தனது கல்லூரி முதல்வரை சந்திக்கிறார். அப்போது அவர் மீதம் வைத்திருக்கும் 48 அரியரையும் ஒரே செமஸ்டரில் முடிக்க வேண்டும் என்று கட்டளையிட அதன் பிறகு என்ன நடந்தது என்பதன் கதை தான் டிராகன் திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் கதை மிகவும் ஸ்ட்ராங்காக இருந்ததால், அது அடுத்தடுத்த கட்டங்களுக்கு ரசிகர்களை அழைத்துச் சென்றிருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி பலருக்கும் பிடித்திருப்பதால் டிராகன் திரைப்படம் சொல்லி அடித்த வெற்றியை ருசித்து இருக்கிறது.
இதனோடு வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி திரைப்படம் காணாமல் போன நிலையில், டிராகனுக்கு தற்போது வரை கூட்டம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் டிராகன் திரைப்படம் வெளியான பத்தே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பதாக, அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருக்கிறார். வரும் நாட்களிலும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால், டிராகன் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் ஈட்ட வாய்ப்பு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.





