கதை தேர்வில் நடிகர் துல்கர் சல்மானை மிஞ்ச ஆளே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு அவர் ஒவ்வொரு திரைப்படங்களையும் பார்த்து பார்த்து நடிக்கிறார். மலையாளத்தில் மிக முக்கிய நடிகரான, மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் சத்தமே இல்லாமல் ஒரு பான் இந்தியா ஹீரோவாக மாறி வருகிறார். முன்னதாக மலையாளத்தில் மட்டும் அவர் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
இதில் சார்லி திரைப்படத்தை நாம் உதாரணமாக கூறலாம். மலையாளத்தை தாண்டி தமிழ் தெலுங்கு என அத்தனை தரப்பட்ட ரசிகர்களுக்கும் அந்த திரைப்படம் மிகவும் பிடித்த காவியமாக மாறிப்போனது. இது போக ஒவ்வொரு திரைப்படங்களிலும் துல்கர் சல்மானின் தேர்வு நன்றாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவிலும் குறிப்பிட்டத்தக்க வெற்றியை கொடுத்திருக்கிறார் துல்கர் சல்மான். மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்த ஓ காதல் கண்மணி திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. அதில் தனது துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் துல்கர் சல்மான். தொடர்ந்து தனது 25வது திரைப்படத்தையும் அவர் தமிழில்தான் கொடுத்தார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. விறுவிறுப்பான கதையில் துள்ளலான கதாபாத்திரங்களை வைத்து அசத்தியிருந்தார் தேசிங்கு பெரியசாமி. இதில் துல்கர் சல்மானின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. இதே போல் சீதா ராமம் திரைப்படமும், யாருமே எதிர்பாராத நேரத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.
இதே போல் கடந்த ஆண்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதுவும் துல்கர் சல்மானின் வெற்றிப்பட வரிசையில் இணைந்தது. இப்படியான சூழலில்தான் தற்போது தமிழில் காந்தா என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். செல்வமணி செல்வராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தை துல்கர் சல்மானே தயாரித்துள்ளார்.
படத்தில் சமுத்திரக்கனிக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு படப்பிடிப்பில் சமுத்திரக்கனிக்கும், துல்கர் சல்மானுக்கும் இடையேயான மோதலையும் ஈகோவையும்தான் இந்த திரைப்படம் பேச இருக்கிறது. ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.





