கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தின் தொடர்ச்சியாக புஷ்பா 2 படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. புஷ்பா படம் தந்த அதிரி புதிரி வெற்றியால், புஷ்பா 2 படம் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடந்த புஷ்பா 2 பிரமோ நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன், நாயகி ராஷ்மிகா மந்தனா, ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரீ லீலா, இந்த படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இயக்குனர் சுகுமாறன் மட்டும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் பாடல்களுக்கு இசையமைத்து, படத்துக்கும் பின்னணி இசை அமைத்தவர் டிஎஸ்பி என சுருக்கமாக அழைக்கப்படுகிற தேவி ஸ்ரீ பிரசாத், ஆனால் புஷ்பா 2 படத்துக்கு அவர் பாடல்களுக்கு இசையமைத்த நிலையில், பின்னணி இசையை அவருக்கு பதிலாக சாம் சிஎஸ் அமைத்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், குறிப்பிட்ட கால அவகாசத்தில் இசையமைத்து தருவதில் டிஎஸ்பி காட்டும் மெத்தனப் போக்குதான் என்று சொல்லப்படுகிறது. அதே போல் குட் பேட் அக்லி படத்தில் இருந்தும் டிஎஸ்பி சமீபத்தில் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் அந்த படத்தில் கமிட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் அந்த படத்தில் இடம்பெறும் 4 பாடல்களுக்கும் டிஎஸ்பி கடைசி வரை இசையமைத்து தராமல் இழுத்தடித்துள்ளார்.
இந்த சூழலில், புஷ்பா 2 படத்தில் இருந்து எடிட்டர் ரூபன் நீக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல முக்கிய எடிட்டராக ரூபன் இருக்கிறார். மெர்சல், அறம், வேலைக்காரன், விவேகம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் எடிட்டராக பணிசெய்தவர் ரூபன். புஷ்பா 2 படத்திலும் அவர் எடிட்டராக பணியாற்றிய நிலையில் திடீரென அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புஷ்பா 2 படத்தின் 99 சதவீத எடிட்டிங் முடிந்த நிலையில், ரூபனை இயக்குனர் சுகுமாறன் நீக்கியது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன் ரூபனுக்கு ஆதரவாக டைரக்டரிடம் பேசியும், அவர் ஏற்கவில்லை. இப்போது மற்றொரு பிரபல எடிட்டர் நவீன் லூயி என்பவர் எடிட்டர் பொறுப்பேற்று 10 எடிட்டர்கள் தலைமையில், புஷ்பா 2 எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏனெனில் இன்னும் ஒரு வாரத்தில் புஷ்பா 2 படம் ரிலீஸாக உள்ளது குறிப்பிடதக்கது.





