தமிழ் சினிமாவில் வளரும் நடிகராக இருந்த ஆரம்ப காலத்தில் இருந்தே தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தவர் நடிகர் விஜய். மேலும் ஆண்டுதோறும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கியும் அவர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா என மிக பிரமாண்டமாக விழா நடத்தி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரை நேரில் வரவழைத்து கல்வி விருதுகளை வழங்கினார்.
அதன்படி முதல் பரிசு ரூ. 25 ஆயிரம் 2ம் பரிசு ரூ. 15 ஆயிரம் 3ம் பரிசு ரூ. 10 ஆயிரம் என கல்வி விருதுடன் ரொக்கப் பரிசுகளையும் மாணவ மாணவியருக்கு வழங்கினார். மேலும் குடும்பத்துடன் அவர்கள் இந்த விழாவுக்கு வந்து செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள், காலை மதியம் உணவு ஏற்பாடுகளும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் செய்யப்பட்டது.
இதில் கடந்த முறை மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு வைர நெக்லஸ் போன்ற அதிகபட்ச விலையில் பரிசுகளை வழங்கி விஜய் அசத்தினார். தவெக கட்சி துவங்கிய பிறகு நடந்த இந்த விழாவில் பங்கேற்ற பெற்றோர்களில் பலரும், அடுத்த முதல்வர் நீங்கள்தான் என்று மேடையிலேயே பாராட்டி பேசியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது தமிழக முதல்வராகி விட்டார் விஜய். மாவட்டம் வாரியாக தமிழக அரசு சார்பில் 10ம் வகுப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த முறையும் பள்ளி கல்வித்துறை சார்பில் அந்த நடைமுறை பின்பற்றப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் கடந்த ஆண்டுகளை போல இப்போதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல்வர் விஜய் 234 தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு கல்வி விருது வழங்குவாரா, அது தொடருமா? என்ற கேள்வி மாணவ மாணவியரிடையே ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் குடும்பத்துடன் விஜயை நேரில் சந்திக்க முடியும் என்பதால் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் விஜய் முதல்வராகி விட்டதால், அரசு விழாவாக அது நடக்குமா, கட்சி விழாவாக இருக்குமா என்பதும் பெரிய குழப்பமாக உள்ளது.





