நடிகர் சூர்யா தற்போது இந்த அளவு மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்ததற்கு ஆரம்பத்தில் அடித்தளம் இட்டு கொடுத்தவர்களின் மிக முக்கியமானவர் இயக்குனர் பாலா. இவரது இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல் சூர்யாவிற்கு மிக நல்ல பெயரையும் எடுத்துக் கொடுத்தது.
பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா நடித்தார். அந்தத் திரைப்படத்தில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் இடம் பெற்று இருக்க, விக்ரம் படம் முழுவதும் பேசாமல் மிக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதற்காக அவர் தேசிய விருதையும் பெற்றார்.
அதேசமயம் விக்ரமுக்கு சமமாக பலரது பாராட்டையும் பெற்றவர் சூர்யா. படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கலகலவென ஒவ்வொரு சீன்னையும் நகர்த்திக் கொண்டு சென்றதில் சூர்யாவுக்கு மிகப்பெரிய பங்கு இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார்.
பிறகு கௌதம் மேனன் திரைப்படங்களும் சூர்யாவிற்கு, வெற்றியை பரிசாக கொடுத்தன. தற்போது, அவர் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இறுதியாக அவர் நடித்த சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் என இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றன. ஆனால் அவை நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அண்மையில் அவரது நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் கங்குவா சூட்டிங்கிற்கு முன்பாக அவர் பாலாவுடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன் சூட்டிங் கன்னியாகுமரியில் நடைபெற்றது. ஆனால் திடீரென ஒரு நாள் சூர்யா படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதியதாக அருண் விஜய் இணைந்தார். தற்போது இந்த கூட்டணி படத்தை எடுத்து முடித்து இருக்கிறது. வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் சூர்யா நடிக்காமல் போனதற்கான காரணத்தை இயக்குனர் பாலா எடுத்துரைத்துள்ளார். அதில், முதலில் சூர்யா படத்தில் இருந்து விலகவில்லை. நாங்கள் இருவரும் பேசி, வேறொரு படத்தில் இணைவதாக முடிவெடுத்தோம். ஏனென்றால் எங்களால் கன்னியாகுமரி போன்ற சுற்றுலா தளத்தில் சூர்யாவை வைத்து சூட்டிங் செய்ய முடியவில்லை. நிறைய பேர் கூடியதால் இந்த முடிவு எங்களால் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.





