தமிழ் சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. 1300 படங்களுக்கு மேல் இசையமைத்தவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களை தனது இசையால் உருவாக்கியவர். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என எல்லா மொழிகளிலும் இசையால் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் இசைஞானி இளையராஜா.
சமீபத்தில் லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் உலகளவில் சிறந்த இசைக் கலைஞர்கள் 80 பேரை கொண்டு வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து சாதனை நிகழ்த்தினார். அவரது அரை நூற்றாண்டு இசை பயணத்தை கௌரவிக்கும் விதமாக, தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளது.
சமீபகாலமாக பல புதிய படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதிலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஹிட் பாடல்களை இயக்குனர்கள் பயன்படுத்தி, ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்துகின்றனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான பல பாடல்கள் இன்றைய படங்களில் வருகின்றன.
இதற்கு இசைஞானி இளையராஜா கடும் ஆட்சபேம் தெரிவித்து தனக்கு மட்டுமே காப்புரிமை உள்ள தனது பாடல்களை யாரும் என் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். மேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும், மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்ட ஈடு கேட்டு அவர்களை மிரட்டும் தொனியில் நோட்டீஸ் அனுப்பி வருகிறார்.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அபரிமிதமான வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையில் உருவான இளமை இதோ இதோ என் ஜோடி மஞ்சக்குருவி ஒத்த ரூபா தாரேன் போன்ற பாடல்களை பயன்படுத்தியற்காக ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குட் பேட் அக்லி படக்குழு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில், குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்கு சம்பந்தப்பட்ட இசை கம்பனிகளிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகுதான் பயன்படுத்தினோம். அந்த இசை நிறுவனங்களிடம் தான் காப்புரிமை இருக்கிறது. அதனால் அவர்களை தொடர்புகொண்டு தடையில்லா சான்று பெற்றோம். எல்லா முறைப்படியே செய்திருக்கிறோம் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.





