இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா எந்தளவுக்கு ரசிகர்களுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு ஒரு பாடகராவும் அவரை எல்லோருக்கும் பிடிக்கும். அவரது குரலில் இருக்கும் வசீகரத்தன்மை அந்த பாடலை இன்னும் பலமடங்கு மெருகேற்றி இசை ரசிகர்களை ரசிக்க வைக்கும். மனதில் உருக்கத்தை உருவாக்கும். பெரிய அளவில் அவர்களை இசைஞானி குரல் வசியப்படுத்தி விடும்.
ஜனனி ஜனனி, இந்த மான் உந்தன் சொந்த மான், இதயம் ஒரு கோவில், தென்றல் வந்து தீண்டும்போது, நான் தேடும் செவ்வந்தி பூவிது, பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா என் தாயென்னும் கோவிலை காக்க மறந்திட்ட என பல நூறு பாடல்கள் இளையராஜாவின் குரலில் ஒலித்து ரசிகர்களை மெய் மறக்க செய்திருக்கின்றன. என்றுமே சாகா வரம் பெற்ற பாடல்களாக அவரது பாடல்கள் இருக்கின்றன.
இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இசைஞானி இளையராஜா கூறியதாவது, நான் பாடகராக மாறியது ஒரு விபத்து மாதிரிதான். 16 வயதினிலே படத்துல மட்டும் நானே பாடணும் என்று முடிவு பண்ணி பாடினேன். நான் பாட்டு ரெக்கார்ட் பண்ற அன்னிக்குதான் யார் பாடணும் என்கிற முடிவை செய்வேன். நான் நோட்ஸ்ல எழுதற பாடகர் பாடகி பெயர்களை பார்த்துட்டு அவங்க தகவல் சொல்லி பாடறதுக்கு கூப்பிடுவாங்க.
நான் ஒரு காதல் பாட்டை டியூன் பண்ண போறேன்னா, அந்த பாட்டுக்கான டியூன் நோட்ஸை எழுதிட்டு எஸ்பிபி எஸ் ஜானகின்னு எழுதிடுவேன். உடனே பார்த்துட்டு அவங்களுக்கு இன்பார்ம் பண்ணிடுவாங்க. அவங்க வந்து பாடலை பாடீட்டு போயிடுவாங்க. இதுதான் நடைமுறையாக இருந்தது.
ஒரு வேளை அந்த பாட்டை பாட எஸ்பி பாலசுப்ரமணியம் இல்லை என்றால் ஜெயச்சந்திரனை வரச் சொல்லுவேன். அவரும் இல்லேன்னா கே ஜே ஜேசுதாஸ், அவர் இல்லேன்னா மலேசியா வாசுதேவன் இப்படி பலபேருக்கு இன்பார்ம் பண்ண சொல்லுவேன். கடைசியில் யாருமே இல்லையா? அடுத்து யாருக்குன்னு கேட்டா, சரி போன்னு சொல்லிட்டு அந்த பாட்டை நானே பாடிடுவேன்.
அப்படிதான் நான் பாட ஆரம்பிச்சேன். இதில் நான் விரும்பி பாடின பாடல்கள் என்றால் நான் தேடும் செவ்வந்திப் பூ இது, தென்றல் வந்து தீண்டும் போது போன்ற பாடல்களை நானே விரும்பி பாடினேன். இதை எல்லாம் வேற யார் பாடினாலும் அந்த எபெக்ட் வராது. அந்த மாதிரி இருக்காது என அந்த நேர்காணலில் இசைஞானி இளையராஜா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





