நடிகை ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். சந்திரமுகி, தெனாலி, குஷி, வாலி, பூவெல்லாம் உன் வாசம், டும்டும்டும், ப்ரியமான தோழி, சில்லுன்னு ஒரு காதல், காக்க காக்க போன்ற பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
நடிப்பை பொருத்த வரை, ஜோதிகா நடிப்பில் எந்தவிதமான குறையும் சொல்ல முடியாது. அவர் ஓவர் ஆக்டிங் செய்வது போல தோன்றினாலும் அதுவும் ஒருவிதத்தில் ரசிக்கும்படியாகவே இருக்கும். குறிப்பாக மாயாவி, தூள், அருள் போன்ற பல படங்களில், சில காட்சிகளில் அப்படிதான் நடித்திருப்பார். எனினும் சந்திரமுகி படத்தில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்து மிரட்டியது.
பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுன்னு ஒரு காதல், காக்க காக்க போன்ற படங்களில் நடித்த போது சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் காதல் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்துக்கு பிறகு ஜோதிகா படங்களில் நடிக்கவில்லை. எனினும் சில ஆண்டுகளுக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, மீண்டும் நடிக்க துவங்கினார்.
சமீபத்தில் ஜோதிகா, மம்முட்டியுடன் நடித்த காதல் தி கோர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்போது மாதவன், அஜய் தேவ்கன் நடித்த சைத்தான் என்ற இந்தி படத்திலும் பிரதான கேரக்டரில் ஜோதிகா நடித்திருக்கிறார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்போது மும்பையில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்ட ஜோதிகாவுக்கு பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன.
இந்நிலையில் ரசிகை ஒருவர், ஜோதிகாவிடம் நேரடியாக ஒரு கேள்வியை கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருந்துவரும் ஜோதிகாவிடம், எக்ஸ் பதிவு ஒன்றில் ஜோதிகாவை டேக் செய்துள்ள ரசிகை, சில்லுன்னு ஒரு காதல் படத்தில், ஐஷூவிற்காக ( பூமிகா) சூர்யாவை ஒருநாள் விட்டுக்கொடுத்தது போல, எனக்கும் விட்டுத் தருவீர்களா என கேட்டிருக்கிறார்.
மேலும், நான் கடந்த 15 ஆண்டுகளாக அவரது தீவிர ரசிகையாக இருந்து வருகிறேன் என்றும் அந்த ரசிகை அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு பதிலளித்த நடிகை ஜோதிகா, நோ அதெல்லாம் முடியாது என பதில் தந்துள்ளார். ரசிகை என்பதற்காக ஒரு நடிகரின் மனைவியிடம் இப்படி எல்லாம் வரம்பு மீறி பேசுவது சரியல்ல, என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





