தமிழ் சினிமாவில் வெற்றிப் பட இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்த அவர் பல சூப்பர் ஹிட் படங்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறார். சுந்தர் சி படம் என்றாலே அது வெற்றிப் படம்தான் என்பது எழுதப்படாத ஒரு விதியாக கோலிவுட்டில் மாறியிருக்கிறது.
காதல் காமெடி குடும்பம் சென்டிமென்ட் ஆக்சன் கவர்ச்சி என தமிழ் சினிமாவின் பார்மூலா அத்துப்படியாக உள்ள இயக்குனர் சுந்தர் சி ஜனரஞ்சகமான படங்களை இயக்கி ரசிகர்களை எப்படியும் வசியப்படுத்தி விடுகிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா படம் கடந்த ஆணடில் பொங்கலுக்கு வெளியாக மாஸ் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இயக்குனர் சுந்தர் சி அவ்வப்போது திகில் படங்களையும் எடுத்து ரசிகர்களை பயமுறுத்தி வருகிறார். அந்த படங்களும் மாஸ் ஹிட் ஆகி வருகின்றன. அரண்மனை அரண்மனை 2 அரண்மனை 3 அரண்மனை 4 என 4 படங்களை தந்துள்ள இயக்குனர் சுந்தர் சி அடுத்ததாக அரண்மனை 5 படத்தையும் இயக்க தயாராகி வருகிறார்.
இந்த சூழலில் இயக்குனர் சுந்தர் சி ஒரு மிகப்பெரிய பாதிப்பு இருப்பதை அவரே ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அந்த நேர்காணலில் கேள்வி கேட்கும் தொகுப்பாளர் வேறு யாருமில்லை. அவருடைய மனைவி நடிகை குஷ்புதான். அப்போது இயக்குனர் சுந்தர் சி தனது பாதிப்பு குறித்த உண்மைகளை ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார்.
இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, தொடர்ந்து நான் அரண்மனை சீரிஸ் திகில் கதைகளை எடுத்ததால் அதற்கான பேய் படங்களை நிறைய பார்த்தேன். எப்போதுமே பேய் கதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்ததால் இரவில் தனியாக படுத்து தூங்க பயமாகி விட்டது. நீ (குஷ்பு) வெளியூர் சென்றுவிட்டால் நம் மகள்களிடம் போய் யாராவது வந்து என்கூட துணைக்கு படுங்க என்று சொல்லும் அளவுக்கு என் நிலமை போய்விட்டது.
பல ஆண்களுக்கு இப்படி தனியாக படுப்பதில் பிரச்னை உள்ளது. பெரிய டைரக்டர் என்று யார் புகழ்ந்து பேசினாலும் தனியாக படுக்க பயப்படும் அளவுக்கு எனக்கு பிரச்னை இருக்கிறது. சினிமாவில் பெரிய ஹீரோவாக இருந்தாலும் கூட அதில் சிலர் என்னை போல தனியாக படுத்து தூங்கப் பயப்படும் ஆட்களாக கூட இருக்கலாம். இன்னிக்கு யார் நம்ம கூட துணைக்கு படுப்பாங்க என்ற கேள்விதான் இரவில் தூங்க போகும் முன்பு எழுகிற முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது என்று இயக்குனர் சுந்தர் சி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





