தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர். மதுரையில் இருந்து விஜயராஜ் என்ற இளைஞராக. சினிமா நடிகராகும் ஆசையில், தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் சென்னைக்கு வந்தவர். ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, பல தயாரிப்பு நிறுவனங்களை, இயக்குனர்களை தேடி தேடி அலைந்திருக்கிறார்.
அப்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த குள்ளமணி, விஜயகாந்துக்காக பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் கேன்வாஸ் செய்திருக்கிறார். மதுரையை சேர்ந்தவர் விஜயராஜ், அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதனால்தான் விஜயகாந்த் பெரிய நடிகரான பிறகு, தனது படங்களில் கண்டிப்பாக குள்ளமணிக்கு வாய்ப்பளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகும் அவர் மீதான அபிமானமும், அன்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குறையவே இல்லை. இப்போதும் சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள கேப்டன் நினைவிடத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வந்து, தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் பல சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பில் கடந்த 1986ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவந்த படம் ஊமை விழிகள். ஆபாவாணன் இயக்கிய இந்த படத்தில் டிஎஸ்பி தீனதயாளன் என்ற கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த், அவரது மனைவியாக சரிதா நடித்திருந்தார்.
இந்த படத்தில் ஜெய்சங்கர், சந்திரசேகர், அருண்பாண்டியன், கார்த்திக், சசிகலா, செந்தில், கோகிலா, இளவரசி, மலேசியா வாசுதேவன், ரவிச்சந்திரன் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. கேப்டன் மறைவுக்கு பிறகு இந்த படத்தை ஊமை விழிகள் 2ம் பாகமாக எடுப்பதாக, ஏற்கனவே இயக்குனர் ஆபாவாணன் அறிவித்திருந்தார்.
ஊமைவிழிகள் 2ம் பாகத்தை ஏஐ தொழில்நுட்பத்தில், விஜயகாந்த் நடிப்பில் எடுக்க பெரிய அளவில் பல கோடிகள் செலவாகும். தவிர, இதற்கு கேப்டனின் மனைவி பிரேமலதா சம்மதிக்க வேண்டும். விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் காட்ட பல கோடி ரூபாய் சம்பளமாக பிரேமலதாவிடம் தர வேண்டும். அதுதவிர அந்த படத்தில் அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு முக்கியமான கேரக்டர் தர வேண்டும் என பல சிக்கல்கள் இருப்பதால், ஊமைவிழிகள் 2 படத்தை துவங்க முடியாமல் ஆபாவாணன் தடுமாறி வருகிறார்.




