- Advertisement -
Homeபொழுதுபோக்குபின்வாங்கிய புஷ்பா 2... ஆகஸ்ட் மாதத்தை குறி வைக்கும் முக்கியமான திரைப்படங்கள்... இரண்டு மாதத்திற்கு தமிழ்...

பின்வாங்கிய புஷ்பா 2… ஆகஸ்ட் மாதத்தை குறி வைக்கும் முக்கியமான திரைப்படங்கள்… இரண்டு மாதத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்துதான்…

- Advertisement -

2021 ஆம் ஆண்டு பான் இந்தியா திரைப்படமாக வெளியானது புஷ்பா. சுகுமாரன் இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த திரைப்படத்தில் புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

- Advertisement -

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இதன் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, நடிப்பிலும் தனது வெரைட்டியை காட்டி இருந்தார் அல்லு அர்ஜுன். குறிப்பாக அவர் ஒரு தோள் பட்டையை சாய்ந்து கொண்டு நடித்தது கவனத்தை பெற்றது. படத்தின் வெற்றிக்கு காரணங்களில் ஒன்றாக, சமந்தா நடித்த பாடலும் அமைந்தது.

 

- Advertisement -

தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ட்ரெண்டான புஷ்பா படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் அல்லு அர்ஜுன். அந்தப் படத்தின் மூலம் சிறந்த இசை அமைப்பிற்கான தேசிய விருதை தேவி ஸ்ரீ பிரசாத் பெற்றார். இப்படி பல்வேறு வகைகளிலும் புஷ்பா திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

 

படம் வெளியான போதே அதன் அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் தயாராகினர். படக் குழுவும், விரைவாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் ஆர்வம் காட்டியது. இதன் போஸ்டரில், அல்லு அர்ஜுன் பெண் வேடமிட்டு காட்சியளித்திருந்தார். இதன் சூட்டிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.

 

ஆனால் பல்வேறு காரணங்களால் தற்போது அது தள்ளிப் போயிருக்கிறது. குறிப்பாக சில காட்சிகளை, மீண்டும் எடுக்க இயக்குனர் சுகுமாரன் திட்டமிட்டு இருக்கிறாராம். இதனால் ஆகஸ்ட் பட ரிலீஸில் இருந்து தள்ளிப் போய் இருக்கிறது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம். இதன் காரணமாக அந்த மாதத்தை தற்போது தமிழ் சினிமா படங்கள் குறி வைத்து இருக்கின்றன.

 

குறிப்பாக விக்ரமின் தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. பா ரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியை குறி வைத்து இருக்கிறது. ஒரே நாளில் இரண்டு முக்கியமான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்